எட்டாவது ஊதியக் குழு டில்லி பா.ஜ., வரவேற்பு
புதுடில்லி:எட்டாவது ஊதியக் குழு அமைக்கும் மத்திய அரசின் முடிவை வரவேற்றுள்ள டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் புதுடில்லி எம்.பி., பான்சூரி ஸ்வராஜ் ஆகியோர், 'நாடு முழுதும் அரசு ஊழியர்களுக்கு இது பெரிய பயனை அளிக்கும்,என, கூறினர்.டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா, புதுடில்லி எம்.பி., பான்சூரி ஸ்வராஜ் ஆகியோர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் பலன்களை பொதுமக்களுக்கு வழங்குவதில் அரசு ஊழியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அதேபோல, அரசின் முயற்சிளில் வெற்றியை உறுதி செய்வதிலும் அவர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. எட்டாவது ஊதியக் குழு அமைக்கும் மத்திய அரசின் முடிவு அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'புதுடில்லியில் உள்ள அரசு ஊழியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஊதியக் குழுவை சரியான நேரத்தில் அமைப்பதன் வாயிலாக, அவர்களின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த ஊதியக் குழு அமைப்பது, ஒரு முக்கிய மைல்கல். ஏனெனில் இது அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஓய்வூதியம் பெறுபவோருக்கும் பயனளிக்கும். குறைந்தபட்ச ஊதியம் மற்றும் தொடர்புடைய கொள்கைகளில் உள்ள மாற்றங்களால் தனியார் துறை ஊழியர்களும் மறைமுகமாக பயனடைவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.