ஆயுள் கைதியான மூதாட்டி 90 நாள் பரோலில் விடுவிப்பு
கலரபுகி: வரதட்சணை கொடுமை வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 93 வயது மூதாட்டி, வயது மூப்பின் காரணமாக, 90 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டார்.கலரபுகி மத்திய சிறையில், கடந்த நவ., 16ம் தேதி, ஓய்வுபெற்ற உபலோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா ஆய்வு செய்தார். அப்போது, சிறையில் எழுந்து நிற்க கூட முடியாத நிலையில் இருந்த மூதாட்டியை பார்த்தார்; அவரை பற்றி விசாரித்தார்.அவரது பெயர் நாகம்மா, 93, வரதட்சணை கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். 11 மாதங்களாக தண்டனை அனுபவித்து வருகிறார். நாளுக்கு நாள் அவரது உடல் நிலை மோசமாகி வருவது, இயற்கை உபாதை கழிக்க முடியாததால், பெண் சிறை அதிகாரிகள் உதவி செய்வதை அவர் அறிந்தார்.மூதாட்டியின் உடல் நிலையை பார்த்து, விரக்தி அடைந்த நீதிபதி, அவரது தண்டனையை ரத்து செய்யுமாறு, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால், மூதாட்டியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, சிறை கண்காணிப்பாளர் அனிதா, 90 நாட்கள் பரோலில் விடுவித்தார்.நடக்க முடியாத நிலையில் இருந்த நாகம்மாவை, அவரது குடும்பத்தினர் குண்டுக்கட்டாக துாக்கி, வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இது, நவம்பர் 28ம் தேதி நடந்தது.இதற்கிடையில், 14 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த ரோடு கிண்ணி கிராமம் சிவசங்கர் கோகி; கரடல்லி கிராமம் சபன்னா பனாரா; தேவதுர்கா காஜாசாப்; யாத்கிர் ரவி ஹொன்னப்பனவர்; பசவகல்யாண் ஜெய்பாரத்; கலபுரகி நகர் அபிதாபேகம் ஆகிய ஆறு ஆயுள் தண்டனை கைதிகளும், நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.