உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோலாரில் 28 மையங்களில் நாளை கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு

கோலாரில் 28 மையங்களில் நாளை கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு

கோலார் : கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு, கோலார் மாவட்டத்தின் 28 மையங்களில் நாளை நடக்கிறது.கிராம நிர்வாக அலுவலர்கள், தங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதியின் சர்வே கல் காணாமல் போயிருந்தால் அரசுக்கு தெரிவிப்பது; நில வரி, அபிவிருத்தி வரி உட்பட அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை வசூலிப்பது இவர்களின் கடமையாகும்.கோலார் மாவட்டத்தில் மொத்தம் 170 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் இருக்க வேண்டும். இதில், 45 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக நடக்க உள்ள தேர்வுக்கு, 3,361 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக, வரும் 29ம் தேதி, மாவட்டத்தின் கோலாரில் 15, முல்பாகலில் 5, மாலுாரில் 4, தங்கவயலில் 4 என 28 மையங்களில் முதற் கட்டமாக எழுத்து தேர்வு நடக்கிறது. இவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன.கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா அளித்த பேட்டி:கிராம நிர்வாக அலுவலர் பணிக்காக, 28 தேர்வு மையங்களிலும் காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை தேர்வு நடக்கும். தேர்வாணையம் விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி, முறைகேடுகள் நடக்காதபடி, கண்காணிக்கப்படும். தேர்வு எழுத வருவோர் ஹால் டிக்கெட், ஆதார் அடையாள அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.தேர்வு மையம் பகுதியில் இருந்து 200 மீட்டர் துாரம் வரையில், அன்று காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை 144 போலீஸ் தடை உத்தரவு அமலில் இருக்கும். இங்குள்ள நகல் எடுக்கும் கடைகள், சைபர் சென்டர்கள் மூடப்படும்.தேர்வு எழுத வருவோர் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வரக்கூடாது. சோதனை நடக்கும் போது ஒத்துழைக்க வேண்டும். ஷூ, சாக்ஸ் அணிய அனுமதி இல்லை. செருப்பு மட்டுமே அணிய வேண்டும்.பிற மாவட்டங்களில் இருந்து தேர்வு எழுத வருவோர், கோலார் மாவட்ட தேவராஜ் அர்ஸ் பவனில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படுவோர், முன்னதாக வந்து அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.இரண்டாம் கட்ட தேர்வு அக்டோபர் 27 ம் தேதி நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ