| ADDED : செப் 24, 2024 07:16 AM
கதுவா; பொய்களை அடிப்படையாக கொண்டே காங்கிரஸ் கட்சி தேர்தல்களை எதிர்கொண்டு வருவதாக ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா விமர்சித்துள்ளார்.ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது. தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; நாட்டில் நடக்கும் ஒவ்வொரு தேர்தல்களையும் காங்கிரஸ் கட்சி பொய்களை அடிப்படையாக வைத்தே எதிர்கொள்கிறது. மக்களையும் ஏமாற்றி, திசைதிருப்பும் வகையில் வாக்குறுதிகளை கூறுகிறது.ஜம்மு காஷ்மீரில் உள்ள இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் எப்போது இங்கு பா.ஜ., ஆட்சி அமையும் எதிர்பார்த்து காத்து கிடப்பதை தேர்தல் பிரசாரத்தின் போது பார்க்க முடிகிறது. நிச்சயமாக அறுதி பெரும்பான்மையுடன் ஜம்மு காஷ்மீரில் பா.ஜ., ஆட்சி அமைக்கும்.மாநில அந்தஸ்தை தருவதாக நாங்கள் உறுதி அளித்த பின்னரே அதை பற்றி ராகுல் செல்லும் இடங்களில் எல்லாம் பேசுகிறார். மாநில அந்தஸ்தை நாங்கள் ஆட்சியின் போது வழங்கிவிட்டால் என்னால் தான் நடந்தது, நான் கொடுத்த அழுத்தமே அதற்கு காரணம் என்று கூறுவார். இவ்வாறு பஜன்லால் சர்மா கூறினார்.