வனத்துறைக்கு விண்ணப்பிக்காமல் தந்தம் வைத்திருந்த மோகன் லால்
கொச்சி:பிரபல நடிகர் மோகன் லால் வீட்டில், வருமான வரித் துறையினர் கைப்பற்றிய யானை தந்தங்கள் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், அவற்றை கைவசம் வைத்திருக்க, அவர் முறைப்படி வனத்துறைக்கு விண்ணப்பிக்கவில்லை என, தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மோகன் லால். கேரளாவைச் சேர்ந்த இவர் தமிழில், 'இருவர்', 'சிறைச் சாலை', 'உன்னை போல் ஒருவன்' என, பல படங்களில் நடித்துள்ளார். இவருக்குச் சொந்தமாக எர்ணாகுளத்தில் உள்ள வீட்டில், வருமான வரித் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.அப்போது, வீட்டில் இருந்த யானை தந்தங்கள் சிக்கின. 'அவை முறைப்படி வனத்துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டு வாங்கப்பட்டதா' என, ஏசுதாஸ் வாராப்புழா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரினார். வனத்துறை சார்பில் அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், முறைப்படி விண்ணப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.