மரிகவுடா உட்பட 6 பேருக்கு அமலாக்க துறை நோட்டீஸ்
பெங்களூரு: 'முடா' வழக்கு தொடர்பாக, அதன் முன்னாள் கமிஷனர் நடேஷ், தினேஷ்குமார் உட்பட ஆறு பேருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.'முடா'வில் சட்டவிரோதமாக மனைகள் வழங்கப்பட்டது குறித்து, லோக் ஆயுக்தாவும், மற்றொரு பக்கம் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்துகின்றன. லோக் ஆயுக்தா ஏற்கனவே, முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உட்பட பலரிடம் விசாரணை நடத்தியுள்ளது.இதற்கிடையே அமலாக்கத்துறையும், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. முடாவின் முன்னாள் தலைவரும், முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவரான மரிகவுடா, முடாவின் முன்னாள் கமிஷனர் நடேஷ், தினேஷ்குமார் என, ஆறு பேருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சமீபத்தில் நடேஷ், தினேஷ் குமாரின் இல்லங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. நடேஷ் வீட்டில் நான்கு பைகளில் இருந்த ஆவணங்களை கைப்பற்றியது. நடேஷும், தினேஷ்குமாரும் பொய்யான ஆவணங்களை உருவாக்கி, நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள மனைகளை விற்றதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இவர்களிடம் விசாரணை நடத்தி, தகவல் சேகரிக்க அமலாக்கத்துறை தயாராகிறது. இவர்களை விசாரித்து முடித்த பின், முதல்வர் சித்தராமையாவுக்கும், அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளது.