வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து பகுதிகளில் வசிக்கும் நாகா பழங்குடியினரின் பண்பாட்டை அறிய, உலக பல்கலைகளுடன் இணைந்து, நாகாலாந்து பல்கலை அகழாய்வு நடத்த உள்ளது.வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் வசிக்கும் நாகா பழங்குடியினர், இந்தோ - மங்கோலாய்டு இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பல்வேறு குழுக்களாக வாழ்ந்து, தனித்த அடையாளங்களுடன், பல்வேறு நாகா மொழிகளை பேசினர். பனி மலைகளின் மீது குடில்களை அமைத்து, மிகக்குறைந்த வெப்பநிலையிலும் வாழும் தகவமைப்பையும், காலநிலை மாற்றங்களையும் அறிந்தவர்கள். விவசாயம், மீன்பிடி தொழில், வேட்டையாடுவதில் வல்லவர்களாக இருந்த இவர்கள், பிரிட்டிஷ் வருகைக்குப் பின் ஒடுக்கப்பட்டு, தனித்தன்மை இழந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் வேளாண்மை உள்ளிட்ட உற்பத்தி சார்ந்த தொழில்நுட்பங்கள், அவர்களின் பரிணாமம் உள்ளிட்டவற்றை அறியும் முயற்சியில், மானுடவியல், தொல்லியல் அறிஞர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், சிட்னி பல்கலை, லா ட்ரோப் பல்கலை, யார்க் பல்கலை, லக்னோவில் உள்ள பீர்பால் சாஹ்னி பழங்கால அறிவியல் நிறுவனம் ஆகியவை, நாகா பழங்குடியினர் பற்றிய தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளன. இதை, நாகாலாந்து பல்கலையின் தொல்லியல் துறை ஒருங்கிணைக்கிறது. இதற்கான நிதியை, ஆஸ்திரேலிய ஆராய்ச்சி கவுன்சில் வழங்குகிறது.நாகாலாந்து பல்கலை, நாகாலாந்தில் உள்ள லங்கா கிராமத்தில் ஏற்கனவே சிறிய அளவில் அகழாய்வு செய்துள்ளது. புதிய அகழாய்வுக்காக, பழங்குடியினரின் வாய்மொழி கதைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த அகழாய்வின் வாயிலாக, நீண்ட காலமாக தனித்த அடையாளத்துடன் வாழும் பழங்குடியினரின் பழைய தொழில்நுட்பத் தொடர்ச்சிகளை அறிய இயலும். - நமது நிருபர் -