வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டெல்லி அரசியம் பற்றி எனக்கு தெரியாது. சமஸ்வாதி பார்ட்டி விளம்பரத்திற்காக இதைச் செய்கிறது. அநேகமாக சீமான் கட்சி போல அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பது உறுதி.
புதுடில்லி:டில்லி சட்டசபைத் தேர்தலில், 70 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட பகுஜன் சமாஜ் கட்சி முடிவு செய்துள்ளது. முதல் வேட்பாளர் பட்டியலை இம்மாத மத்தியில் வெளியிடும் எனவும் கூறப்படுகிறது.டில்லி சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி, 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரசாரம் செய்து வருகிறது. மேலும், தினம் ஒரு வாக்குறுதிகளையும் அறிவித்து வருகிறது.ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் பா.ஜ.,வும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளது. தேர்தல் அறிக்கை மற்றும் வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரக் களத்தி இறங்கியுள்ளது.இந்நிலையில், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் டில்லியின் 70 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து, பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:டில்லி சட்டசபைத் தேர்தல் இந்த முறை சுவாரஸ்யமாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கும். பகுஜன் சமாஜ் கட்சியும் டில்லியின் 70 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்குகிறது. டில்லி மாநகரை 5 மண்டலங்களாகப் பிரித்து வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணி நடக்கிறது. வேட்பாளர் தேர்வு செயல்முறையை கண்காணிக்க ஒவ்வொரு மண்டலத்திலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் பரிந்துரைகளை கட்சித் தலைவர் மாயாவதிக்கு அனுப்புவர். பரிந்துரை அடிப்படையில் வேட்பாளரை தேர்வு செய்து இம்மாத மத்தியில் வேட்பாளர் பட்டியலை மாயாவதி அறிவிப்பார். வரும் 15ம் தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.ஆனால், வேட்பாளர் பட்டியலுக்கு முன்பே வரும் 5ம் தேதி தேர்தல் பிரசாரம் துவக்கப்படும். தேர்தல் தேதி மற்றும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும், மாயாவதி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் டில்லியில் தீவிர பிரசாரம் செய்வர்.கடந்த 2020ல் நடந்த தேர்தலில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ், 0.71 சதவீத ஓட்டுக்களைப் பெற்றிருந்தாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.அதேபோல, 2015, 2013 மற்றும் 2008 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் 70 தொகுதியிலும் பகுஜன் சமாஜ் போட்டியிட்டது. கடந்த 2003ல் மட்டும் 40 இடங்களில் போட்டியிட்டது.கடந்த 2015ல் 1.13 சதவீத ஓட்டுக்களைப் பெற்றிருந்த பகுஜன் சமாஜ், 2013ல் 5.35 சதவீதம், 2008ல் 14.05 சதவீதம், 2003ல் 5.76 சதவீதம் ஓட்டுக்களை வாங்கியிருந்தது. இதில், 2008ம் ஆண்டில் மட்டும் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது.ஆம் ஆத்மிக்கு தலித் வாக்கு வங்கியே வெற்றிக்கு பெரிதும் உதவி செய்கிறது என கணிக்கப்பட்டுள்ள நிலையில், மாயாவதி கட்சியும் அனைத்து தொகுதியிலும் களம் இறங்குவதால், ஆம் ஆத்மிக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டெல்லி அரசியம் பற்றி எனக்கு தெரியாது. சமஸ்வாதி பார்ட்டி விளம்பரத்திற்காக இதைச் செய்கிறது. அநேகமாக சீமான் கட்சி போல அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பது உறுதி.