டில்லியில் பள்ளி அருகே வெடி விபத்து; பயங்கரவாத சதியா என விசாரணை
புதுடில்லி : டில்லியில் ரோகிணி பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப்., பள்ளி அருகே, நேற்று காலை பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. பயங்கரவாத சதியா என்பது குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.டில்லியின் ரோகிணி பகுதியில் உள்ள பிரசாந்த் விஹார் என்ற இடத்தில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பள்ளி செயல்பட்டு வருகிறது. சமூக வலைதளம்
இந்த பள்ளி சுற்றுச்சுவர் அருகே, நேற்று காலை 7:30 மணிக்கு, பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது.இதனால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்த நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. வெடி சத்தத்தை கேட்டு அலறிய பொதுமக்கள், போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வெடி சத்தத்துக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:சி.ஆர்.பி.எப்., பள்ளி அருகே பயங்கர வெடி சத்தம் கேட்டதாக, காலை 7:50 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. இதன்படி சம்பவ இடத்தில் ஆய்வு செய்தோம்.பள்ளியின் சுற்றுச்சுவர், அருகில் இருந்த கடைகள், கார் கண்ணாடி சேதமடைந்துள்ளன. இதில், யாருக்கும் எந்த காயமும் ஏற்பட வில்லை. இந்த பயங்கர வெடி சத்தம் 2 கி.மீ., தொலைவுக்கு கேட்டதாக மக்கள் தெரிவித்தனர்.சம்பவ இடத்தில் உலோகம் போன்ற பொருட்கள், மின்னணு சாதனங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை. பள்ளி சுற்றுச்சுவருக்கு அருகில் வெள்ளை நிற பவுடர் போன்ற பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வு நடக்கிறது.இந்த குண்டு வெடிப்புக்கு பயங்கரவாத தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து அறிய, வெடி விபத்து நடந்த இடத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். கண்காணிப்பு
விபத்து நடந்த இடத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்து, வெடி விபத்துக்கான காரணத்தை தடயவியல் நிபுணர்கள் கண்டறிந்து வருகின்றனர். மேலும், பள்ளி அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.