பார்சலில் வெடி பொருள் குஜராத்தில் இருவர் காயம்
ஆமதாபாத்: குஜராத்தில், குடும்ப முன்விரோதம் காரணமாக பார்சலில் வெடிபொருளை அனுப்பி வெடிக்க செய்த சம்பவத்தில், இரண்டு பேர் காயமடைந்தனர்.குஜராத்தின் ஆமதாபாதில் பல்தேவ் சுகாடியா என்பவர், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு, மர்ம நபர் ஒருவர் நேற்று காலை பார்சல் எடுத்து வந்தார். அதை, சுகாடியாவின் சகோதரர் கிரித் வாங்க சென்றார்.அப்போது, பார்சலில் இருந்து புகை வருவதை அறிந்த கிரித், உடனே பார்சலை வீச முயன்றார். ஆனால், அதற்குள் அது வெடித்து சிதறியது. இதில், கிரித்துக்கு லேசான காயம் ஏற்பட்டது.இதேபோல் பார்சலை எடுத்து வந்த நபரும் காயமடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், பார்சல் எடுத்து வந்த நபரின் பெயர் கவுரவ் காதாவி என்பது தெரியவந்தது. இவருடன், மற்றொரு நபரும் இணைந்து பார்சலில் வெடிபொருள் வைத்ததையும் போலீசார் கண்டறிந்தனர்.ஏற்கனவே, சுகாடியா குடும்பத்தினருடன் கவுரவ் காதாவிக்கு மோதல் போக்கு இருந்த நிலையில், முன்விரோதம் காரணமாக, பார்சலில் வெடிபொருளை வைத்து வெடிக்க செய்தது தெரியவந்துள்ளது.கவுரவ் காதாவியுடன் இணைந்து வெடிபொருள் வைத்து அனுப்பிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, பார்சலில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் என்ன மாதிரியானது என்பது குறித்து, வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடயவியல் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.