உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிரா முதல்வரானார் பட்னவிஸ் ஷிண்டே, அஜித் பவார் துணை முதல்வர்கள்

மஹாராஷ்டிரா முதல்வரானார் பட்னவிஸ் ஷிண்டே, அஜித் பவார் துணை முதல்வர்கள்

மும்பை, மஹாராஷ்டிராவின் முதல்வராக பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் நேற்று பதவியேற்றார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்.,கின் அஜித் பவார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.மஹாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த மாதம் 20ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவு, 23ம் தேதி வெளியானது. இதில், ஆளும் மஹாயுதி கூட்டணி, மொத்தம் உள்ள 288ல், 230 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

தயக்கம்

முதல்வர் பதவி யாருக்கு என்பதில் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. தனிப்பெரும் கட்சியான பா.ஜ., முதல்வர் பதவிக்கு உரிமை கோரியது. ஆனால், கூட்டணி தர்மம், கவுரவ பிரச்னை போன்ற காரணங்களை காட்டி, ஏக்நாத் ஷிண்டேயின் முதல்வர் பதவியை விட்டுத் தர சிவசேனா தயக்கம் காட்டியது.பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தலைவர் நட்டா ஆகியோருடன் பேச்சு நடத்திய பின், அவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக ஷிண்டே கூறினார். ஆனாலும், முதல்வர் பதவியை விட்டுத் தருவதற்கு தயாராக இல்லை என்பதை அவர் உணர்த்தினார்.இந்நிலையில், புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கு நாள் குறிக்கப்பட்டது. கடைசி நேர பேச்சுக்குப் பின் சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று நடந்த விழாவில், பா.ஜ., வின் தேவேந்திர பட்னவிஸ், முதல்வராக பதவியேற்றார். கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.கூட்டணியில் தொடருவாரா, தொடர்ந்தாலும், துணை முதல்வர் பதவியை ஏற்பாரா என்று கடைசி நேரம் வரை சந்தேகம் எழுந்த நிலையில், துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து, அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராக பதவியேற்றார்.

தொடர்ந்து பேச்சு

கடந்த 2014ல் முதல் முறையாக முதல்வரான தேவேந்திர பட்னவிஸ், 54, தற்போது மூன்றாவது முறையாக முதல்வராகியுள்ளார். ஷிண்டே அரசில் அவர் துணை முதல்வராக இருந்தார். தற்போது ஆறாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக உள்ள அவர், மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.சிவசேனா கட்சியை உடைத்து, அதன் அங்கீகாரத்தையும் பெற்ற ஏக்நாத் ஷிண்டே, 60, கடந்த 2022ல் நடந்த அரசியல் மாற்றத்தில் முதல்வரானார். தற்போது இரண்டாவது முறையாக துணை முதல்வர் பதவியை ஏற்றுள்ளார்.தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவார், 65, தேர்ந்த அரசியல்வாதி. கட்சியை உடைத்து, அதன் அங்கீகாரத்தையும் பெற்றுள்ள அவர், தற்போது ஆறாவது முறையாக துணை முதல்வர் பதவியை ஏற்றுள்ளார். உத்தவ் தாக்கரே - சரத் பவார் கட்சிகள் கூட்டணி ஆட்சியிலும் அவர் துணை முதல்வராக இருந்தார். புதிய அரசில் இடம்பெற உள்ள அமைச்சர்கள், இலாகாக்கள் தொடர்பாக மூன்று கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சு நடக்கிறது.

பலத்தை காட்டிய கூட்டணி!

மஹாராஷ்டிரா முதல்வர், துணை முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பல்துறை பிரபலங்கள் பங்கேற்றனர். மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை காட்டும் வகையில், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பலரும் விழாவில் பங்கேற்றனர்.பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் பங்கேற்றனர். சிவ்ராஜ் சிங் சவுகான், ஜோதிராதித்ய சிந்தியா, ராம்தாஸ் அதாவ்லே ஆகிய மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர்.பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களான, உத்தர பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத், அசாமின் ஹிமந்த பிஸ்வா சர்மா, உத்தரகண்டின் புஷ்கர் சிங் தாமி, ஹரியானாவின் நாயப் சிங் சைனி, குஜராத்தின் பூபேந்திர படேல், கோவாவின் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசத்தின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளத் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதீஷ் குமாரும் பங்கேற்றனர். மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் குமாரசாமியும் பங்கேற்றார்.தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, குமாரமங்களம் பிர்லா, பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான், சல்மான் கான், ரன்பீர் கபூர், மாதுரி தீட்சித், சஞ்சய் தத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை