| ADDED : அக் 08, 2025 11:36 PM
சியோனி:மத்திய பிரதேசத்தில், பணி மாறுதல் செய்யப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரியை சக ஊழியர்கள், பல்லக்கில் துாக்கி சுமந்து சென்று பிரியாவிடை அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ம.பி.,யின் சியோனி மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் சன்ஸ் கிருதி ஜெயின். 2015 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. மாவட்ட கலெக்டராக மிகச் சிறப்பாக பணியாற்றியதால் மக்கள் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றார். சமீபத்தில் ம.பி., அரசு, நிர்வாக காரணங்களுக்காக, 12 மாவட்ட கலெக்டர்களை பணியிட மாற்றம் செய்தது. அதில் சன்ஸ்கிருதி, போபால் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதனால், கலெக்டர் அலுவலக ஊழியர்கள், மாவட்ட மக்கள் கவலை அடைந்தனர். பணி மாறுதலுக்கு முன்பாக நேற்று கடைசியாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சன்ஸ்கிருதி ஜெயினுக்கு ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரியாவிடை கொடுத்தனர். அன்னப்பறவை வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்த பல்லக்கை ஏற்பாடு செய்து, அதில் சன்ஸ்கிருதியையும், அவரது இரு மகள்களையும் அமர வைத்து, ஊழியர்கள் சிறிது துாரம் வரை சுமந்து சென்று தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த, 'வீடியோ', சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் 1989 பிப்., 14ல் பிறந்த சன்ஸ்கிருதி, தன் குழந்தை பருவத்தில் நாடு முழுதும் பல்வேறு பகுதிகளில் வசித்து இருக்கிறார். இவரது பெற்றோர் இருவருமே இந்திய விமானப் படையில் சேவையாற்றியவர்கள். தந்தை போர் விமான விமானியாக இருந்தார். தாய் விமானப்படையின் மருத்துவ துறையில் பணியாற்றினார்.