உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகனின் ஆலோசனையால் லாபம் அடையும் விவசாயி

மகனின் ஆலோசனையால் லாபம் அடையும் விவசாயி

தன் மகனின் ஆலோசனையை கேட்டு, அதன்படியே நடந்து கொண்ட தந்தை, லட்சம், லட்சமாக சம்பாதிக்கிறார். தொழிலிலும் முன்னேறி உள்ளார்.பெரும்பாலான விவசாயிகள், ஒரே விதமான விளைச்சலை பயிரிடுகின்றனர். அக்கம், பக்கத்து நிலங்களின் விவசாயிகள் பயிரிட்ட விளைச்சலையே, தாங்களும் பயிரிடுவது வழக்கம். இதனால் லாபம் அடைந்தவர்களை விட, நஷ்டம் அடைவோரே அதிகம். தொடர் நஷ்டத்தால் விவசாயத்துக்கு முழுக்கு போட்டு, கூலி வேலை செய்து பிழைப்போரும் உள்ளனர்.

பல நஷ்டம்

விவசாயத்தையும் லாபகரமான தொழிலாக்க முடியும் என்பதை, தந்தை, மகன் நிரூபித்துள்ளனர். பெலகாவி, பைலஹொங்கலாவை சேர்ந்தவர் சோமலிங்கப்பா, 60. விவசாயியான இவர் சோளம், தக்காளி உட்பட சில விளைச்சல்களை பயிரிட்டு வந்தார். பல முறை நஷ்டம் ஏற்பட்டது.இவரது மகன் மகேஷ், பெங்களூரில் மென்பொறியாளராக பணியாற்றுகிறார். இவர் ஒரே விதமான பயிர்களை பயிரிட வேண்டாம்; வெளிநாட்டு உற்பத்தியான டிராகன் பழத்தை பயிரிடும்படி, தந்தைக்கு ஆலோசனை கூறினார். அதன்படி சோமலிங்கப்பா, டிராகன் பழத்தை பயிரிட்டு அமோக மகசூல் பெற்றுள்ளார். லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:ஏதாவது புதிய விளைச்சலை பயிரிடலாம் என, என் மகன், நான்கைந்து ஆண்டுகளாக ஆலோசனை கூறினார். இதற்கு அதிகம் செலவாகும் என்பதால், மவுனமாக இருந்தேன். ஆனால் இம்முறை டிராகன் புரூட் வளர்க்கலாம் என, நெருக்கடி கொடுத்ததால் நானும் டிராகன் புரூட் பயிரிட்டேன். மகனின் பேச்சை கேட்டதால் லாபம் அடைந்துள்ளேன்.

அறுவடை

முதல் முறை அறுவடை செய்தபோது, 18 குவிண்டால் பழங்கள் கிடைத்தன; கிலோவுக்கு 150 ரூபாய் வீதம் விற்பனை செய்தோம். இரண்டாவது முறை 23 குவிண்டால் அறுவடை செய்தோம்; கிலோவுக்கு 120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. மூன்றாவது முறை 26 குவிண்டால் அறுவடையானது; கிலோவுக்கு 100 ரூபாய் வீதம் விற்றோம். 4வது முறையாக 14 டன் விளைந்தது; இப்போதும் கிலோவுக்கு 100 ரூபாய் கிடைத்தது.வியாபாரிகளே வயலுக்கு வந்து, பழங்களை வாங்கிச் செல்கின்றனர். நல்ல லாபம் கிடைத்துள்ளது. எங்களுடையது செம்மண் பூமி. விஜயபுரா, தேவரஹிப்பரகியில் இருந்து செடி வாங்கி வந்து பயிரிட்டோம். நாங்கள் ரசாயன உரம் பயன்படுத்துவது இல்லை. சாணம், கோமியம், கோழி கழிவு என, இயற்கையான உரங்களை பயன்படுத்துகிறோம்.எங்கள் ஊரில், முதன் முறையாக, வெளிநாட்டு ரகத்தை சேர்ந்த டிராகன் புரூட் விளைகிறது. இந்த பழங்களை இதற்கு முன் பார்த்தது இல்லை. சுற்றுப்பகுதி விவசாயிகளும், அதை விளைவிக்க ஆர்வம் காட்டுகின்றனர். எங்களுக்கு தோட்டக்கலைத்துறை ஊக்கமளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி