சாமந்தி பூ விலை சரிவால் விவசாயிகள் கவலை ஒரு கிலோ ரூ.10 - ரூ.30 வரை விற்பனை
கோலார் மாவட்டத்தில் பல இடங்களில் சாமந்தி பூக்கள் பயிரிடப்படுகின்றன. இதில் அதிகமாக பங்கார்பேட்டை தாலுகாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து கர்நாடகாவின் பிற நகரங்களுக்கு மட்டுமின்றி தமிழகம், ஆந்திராவுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.பங்கார்பேட்டை தொகுதியில் காய்கறி விளைச்சலுடன் 12 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக சாமந்தி பூ இவ்வாண்டு பயிரிடப்பட்டது. ஒரு ஏக்கருக்கு பூக்களை பயிரிட, ஒரு லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் முதலீடு செய்தனர்.விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பூதிகோட்டை, பளமந்தி, காமசமுத்ரா, உளிபெளே, நாயக்கரஹள்ளி, மாரண்ட ஹள்ளி, தொட்ளி உட்பட பல இடங்களில் சாமந்தி பூக்கள் அதிகளவு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.ஒரு கிலோ 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரு ஏக்கரில் 5 லட்சம் ரூபாய் வரை பூக்கள் விற்கப்பட்டுள்ளது. இதில் 8,000 ஏக்கரில் விளைந்த பூக்கள், பறிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டது. இன்னமும், 4,000 ஏக்கரில் சாமந்தி பூக்கள் பறிக்க வேண்டிய கட்டத்தில் உள்ளன.பூக்களை பறிப்பதற்கு, ஒருவருக்கு 450 ரூபாய் கூலி கொடுக்க வேண்டும். ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ பூ, 10 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்குவதற்கும் ஆளில்லை. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.பூக்களை பறித்து விற்பனை செய்வதை விட ஆடு, மாடுகளுக்கு தீவனமாக விட்டு விடுவதே மேல் என்று விவசாயிகள் குமுறுகின்றனர்.பண்டிகை காலமாக இருந்தால் பூக்களுக்கு லாபம் கிடைக்கும். தற்போது பூக்கள் பூத்து குலுங்கியும் விற்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பலரும் வருத்தத்தில் உள்ளனர்.தக்காளியும் கைவிட்டதுதக்காளி விலை ஏற்றம், இறக்கமாக இருப்பதால் பூக்கள் பயிரிட்டால் அதிக லாபம் வரும் என்று எதிர்ப்பார்த்து, 5 ஏக்கரில் சாமந்தி செடிகளை வளர்த்தேன். விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த ஒரு வாரத்தில் பூக்கள் விலை சரிந்துவிட்டது. மீதியுள்ள பூக்களை பறித்தால் மேலும் நஷ்டம் ஏற்படும். என்ன செய்வதென தெரியவில்லை.கிருஷ்ணப்பா விவசாயி, பளமந்திவாங்க ஆளில்லைதுவக்கத்தில் மழை பெய்தபோது, மகிழ்ச்சியுடன் பூக்கள் பயிரிட்டோம். பங்கார்பேட்டை தாலுகாவில் மழை ஏமாற்றிவிட்டது. இதனால் காய்கறிகள், பூக்கள் விளைச்சல் தரவில்லை. பூக்களில் பூச்சி தாக்கியது. இதனால், உரிய நேரத்தில் பூக்கவில்லை. ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் கூட பூக்களை வாங்க யாரும் முன் வரவில்லை.ராமே கவுடா விவசாயி, பூதிகோட்டை.நிவாரணம் கிடைக்குமா?மழை பெய்ய தவறியதால் பயிர் விளைச்சல்கள் பாதித்துள்ளன. இதில் நிலக்கடலை, கேழ்வரகு, துவரை, காய்கறிகள், பூக்கள் என பலவும் பாதித்துள்ளன. விவசாய அமைப்புகள் நிவாரணம்கேட்டு மனு அளித்துள்ளன. அரசின் கவனத்திற்கு தெரிவித்துள்ளோம்.நாராயணப்பாஅதிகாரி, தாலுகா தோட்டக் கலைத் துறை, பங்கார்பேட்டை - நமது நிருபர் -.