உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூந்தோட்டங்களில் செல்பி பாயின்ட் வருமானத்துக்கு வழி பார்த்த விவசாயிகள்

பூந்தோட்டங்களில் செல்பி பாயின்ட் வருமானத்துக்கு வழி பார்த்த விவசாயிகள்

குண்டுலுபேட்: இது செல்பி யுகம். மக்கள் எதை கண்டாலும், 'செல்பி' எடுத்துக் கொள்வர். தாங்கள் எடுத்த போட்டோக்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, எத்தனை 'லைக்ஸ்' வந்துள்ளது; எத்தனை 'கமென்ட்' வந்துள்ளது என, கணக்கு போடுவோர் அதிகம். தங்களின் போட்டோக்கள், வீடியோக்கள் பரவ வேண்டும் என, விரும்பாதோரே இருக்க முடியாது.செல்பி பிரியர்களுக்காகவே, பொருட்காட்சிகள், மலர் கண்காட்சிகளில், 'செல்பி பாயின்ட்' அமைப்பது, புது டிரெண்டாக மாறியுள்ளது.இத்தகைய சூழ்நிலையில், கண்ணுக்கு அழகாக மலர்ந்து நின்றுள்ள சூரியகாந்தி, செண்டுப்பூக்கள் நிறைந்த தோட்டங்களை கண்டால் விடுவரா; இவற்றின் நடுவில் நின்று செல்பி எடுப்பர்.

பல ரகம்

சில விவசாயிகள், போட்டோ தானே எடுத்து கொண்டு போகட்டும் என, மவுனமாக இருப்பர். சில விவசாயிகள், பூக்கள் பாழாகும் என்பதால், தோட்டத்துக்குள் அனுமதிக்க மறுப்பர். மேலும் பலர், சுற்றுலா பயணியரிடம் பணம் வாங்கி கொண்டு செல்பி, வீடியோ, போட்டோக்கள் எடுக்க அனுமதிக்கின்றனர். சுற்றுலா பயணியருக்காக தோட்டத்தில் காத்திருக்கின்றனர்.சாம்ராஜ் நகர் குண்டுலுபேட்டில் ஏராளமான தோட்டங்கள், வயல்களில் சூரியகாந்தி, செண்டு பூக்கள் வளர்ந்துள்ளன. இவற்றின் அழகு மனதை கொள்ளை கொள்கிறது. துாரத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணியர், தோட்டங்களில் வளர்ந்துள்ள பூக்களை கண்டு துள்ளாட்டம் போடும் மனநிலைக்கு வருகின்றனர். பூக்களுக்கு நடுவே நின்று, போட்டோ, வீடியோ எடுக்கின்றனர். இவர்கள் நடந்து செல்வதால், பூக்கள் மிதிபட்டு பாழாகின.இதை பார்த்து மனம் வருந்திய, குண்டுலுபேட்டின், பேகூர் கிராமத்தின் விவசாயி ஒருவர், பூக்களுக்கு நடுவே செல்பி எடுக்க கட்டணம் வசூலித்தார். சுற்றுலா பயணியரும் விவசாயி கேட்ட பணத்தை கொடுத்து, அழகான பூக்களின் உலகில் பொழுது போக்கிவிட்டு, போட்டோ, வீடியோ எடுத்து செல்கின்றனர்.

செல்பி பாயின்ட்

அதன்பின் மற்ற விவசாயிகளும், இதே வழியை பின்பற்ற துவங்கினர். இதற்காகவே தோட்டங்களில் செல்பி பாயின்ட் அமைத்துள்ளனர். குண்டுலுபேட்டின் பண்டிப்பூர் தேசிய பூங்கா வனப்பகுதி எல்லையில் உள்ள மத்துார், சென்னமல்லிபுரா கிராமங்களின் விவசாயிகள் சூர்யகாந்தி, செண்டு பூ அதிகம் விளைவிக்கின்றனர்.கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, மஞ்சள் நிற பட்டுச்சேலையை விரித்தது போன்று, பூக்கள் மலர்ந்துள்ளன. வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணியர், இந்த அழகான காட்சியை பார்த்து, வாகனத்தை நிறுத்திவிட்டு சில மணி நேரங்கள், பூந்தோட்டத்தில் பொழுது கழித்து விட்டு செல்கின்றனர். இவர்களால் விவசாயிகளுக்கும் ஓரளவு வருவாய் கிடைக்கிறது. சுற்றுலா பயணியருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ