சுற்றுலா பயணிகளுக்காக வருகிறது கண்ணாடி இழை டபுள் ெடக்கர் பஸ்
மூணாறு:மூணாறின் இயற்கை எழிலை பஸ்சில் பயணித்தவாறு ரசிக்கும் வகையில் கண்ணாடி இழையால் வடிவமைக்கப்பட்ட 'டபுள் டெக்கர்' பஸ் பயன்பாட்டுக்கு வருகிறது.கேரளா, திருவனந்தபுரத்தில் 'நகர் காட்சிகள்' என்ற பெயரில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் துவங்கப்பட்ட 'டபுள் டெக்கர்' பஸ் சர்வீஸ் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.அதன்படி மூணாறின் அழகை பஸ்சில் பயணித்தவாறு ரசிக்கும் வகையில் ' டபுள் டெக்கர்' பஸ் சேவை துவக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு, கடந்த ஏப்ரலில் சோதனை ஓட்டம் நடந்தது. வடிவமைப்பு
பயணிகள் பஸ்சில் பயணித்தபடி இயற்கை எழிலை ரசிப்பதற்கு ஏற்ப ' கேரள அரசு போக்குவரத்து கழகம் ராயல் வியூ' திட்டத்தில் சுற்றிலும் கண்ணாடி இழை கொண்டு ' டபுள் டெக்கர்' பஸ் வடிவமைக்கப்பட்டது. அதனை திருவனந்தபுரத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் துவக்கி வைத்தார். நவீன வசதி
இந்த பஸ்சில் கீழ் தளத்தில் 12 பேர், மேல் தளத்தில் 38 பேர் என 50 பேர் பயணிக்கலாம். நவீன இருக்கைகள், மியூசிக் சிஸ்டம், பொது தகவல் அமைப்பு, அலைபேசி சார்ஜ் செய்யும் வசதி உள்பட பல்வேறு அதி நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தவிர பஸ் இரவில் ஒளிரும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பயணத்தின் இடையே குடிநீர், பலகாரம், குளிர்பானம் ஆகியவை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.மூணாறில் சுற்றுலா பயணிகள் பயன் பெறும் வகையில் ஜன.,15க்குள் 'டபுள் டெக்கர்' பஸ் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வண்ண விளக்குகள், கண்ணாடி இழை என அழகுடன் பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதனை 'போட்டோ ஷூட்' உட்பட பலவற்றிற்கு பயன்படுத்தலாம்.