ஓபன் ஏ.ஐ., டீப்சீக் ஏ.ஐ., செயலிகளை அலுவலகத்தில் பயன்படுத்த வேண்டாம்: பணியாளர்களுக்கு நிதியமைச்சகம் உத்தரவு
புதுடில்லி: அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருவிகள் பயன்பாட்டை தவிர்க்கும்படி, பணியாளர்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், ஸ்டார்கேட் ஏ.ஐ., என்னும் மெகா ஏ.ஐ., திட்டத்தை அறிவித்தார். இதற்கு போட்டியாக சீனா சமீபத்தில் 'டீப்சீக்' செயலியை அறிமுகப்படுத்தி இருந்தது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி அடுத்தடுத்து பல நிறுவனங்கள் தங்கள் பதிப்பை அறிமுகம் செய்து வருகின்றன. இதனிடையே, சொந்தமாக ஏ.ஐ., மாடலை இந்தியா உருவாக்க இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நிதி அமைச்சக பணியாளர்களுக்கு கடந்த வாரம் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் சாட்ஜிபிடி, சீனாவின் டீப்சீக் போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் செயலிகள், கருவிகளை பயன்படுத்துவது, அரசின் ஆவணங்கள் மற்றும் தரவுகள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியும் என்பதால், அவற்றை அலுவலகத்தின் கணினி, உபகரணங்களில் பயன்படுத்துவதை பணியாளர்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.ஏற்கனவே ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், தகவல்கள் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்பதை குறிப்பிட்டு, அந்நாட்டின் அரசு பணியாளர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவில் ஏற்கனவே பதிப்புரிமை பெற்ற படைப்புகளை அனுமதியின்றி பயன்படுத்துவதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன் ஏ.ஐ., நிறுவனத்துக்கு எதிராக டில்லி ஐகோர்ட்டில் பதிப்பகங்கள், டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை அரசு எச்சரிக்கையுடன் கையாள்வதாக கூறப்படுகிறது.