புதுடில்லி: முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்போருக்கான நிதி உதவியை, 100 சதவீதம் அதிகரிக்க, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஒப்புதல் அளித்தார். இந்த நடவடிக்கை, நவ., 1 முதல் அமலுக்கு வருகிறது. ராணுவ அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட கேந்திரிய சைனிக் வாரியத்தின் வாயிலாக முன்னாள் ராணுவ வீரர்களுக்கும், அவர்களை சார்ந்தோருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், அவர்களுக்கான உதவித் தொகைகளும் அளிக்கப்படுகின்றன. இந்நிலையில், அதற்கான மானிய தொகைகளை அதிகரித்து ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: வயதான முன்னாள் ராணுவத்தினர், ஓய்வூதியம் பெறாத முன்னாள் ராணுவத்தினர் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட விதவைகளுக்கு நிலையான வாழ்நாள் ஆதரவை வழங்கும் வகையில், பயனாளி ஒருவருக்கு மாதந்தோறும் வழங்கப்படும், 4,000 ரூபாய் ஓய்வூதிய மானியம், 8,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதேபோல், கல்வி மானிய தொகையாக வழங்கப்படும், 1,000 ரூபாய், 2,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வழங்கப்படும் மானிய தொகை, 50,000 ரூபாயில் இருந்து, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விகிதங்கள், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.