மருத்துவமனையில் தீ துப்புரவு ஊழியர் பலி
புதுடில்லி:தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், துப்புரவுப் பணியாளர் உயிரிழந்தார். புதுடில்லி, ஆனந்த் விஹார் கோஸ்மோஸ் மருத்துவமனையின், இணையதள பராமரிப்பு அறையில் நேற்று மதியம், 12:00 மணிக்கு தீப்பற்றி, மளமளவென அருகில் உள்ள அறைகளுக்கு பரவியது. அப்போது, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த, எட்டு நோயாளிகள், அருகிலுள்ள புஷ்பாஞ்சலி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட துப்புரவு ஊழியர் அமித், 28, டயாலிசிஸ் அறை ஊழியர்கள் ஹர் தேவி மற்றும் நரேஷ் ஆகியோர் புஷ்பாஞ்சலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அமித் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து, ஆனந்த் விஹார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.