உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புல்லட் ரயில் திட்டத்தில் அடுத்த முன்னேற்றம்: ரயில்வே அமைச்சர் பெருமிதம்

புல்லட் ரயில் திட்டத்தில் அடுத்த முன்னேற்றம்: ரயில்வே அமைச்சர் பெருமிதம்

புதுடில்லி: '' புல்லட் ரயில் திட்டத்தில் 3வது சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,'' என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.கிழக்காசிய நாடான ஜப்பான் கடனுதவியுடன், மும்பை - ஆமதாபாத் இடையே, 508 கி.மீ., துாரத்துக்கு, அதிவேக புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் இயங்கும் வகையில், இந்த ரயில் பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள இந்த ரயில் திட்டத்துக்கு, 2017ல், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த, 2023 டிசம்பருக்குள் பணியை முடிக்க காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்னைகளால் நீட்டிக்கப்பட்டது. முதல் புல்லட் ரயில் சேவை அடுத்த ஆண்டு ஆக., 15ல் துவங்கும் என பா.ஜ.,வைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தெரிவித்தார்.புல்லட் ரயில் திட்டத்தின் மொத்த நீளமான 508 கி.மீ., தூரத்தில் 27.4 கி.மீ., நீளத்திற்கு சுரங்கப்பாதைகள் அமைகின்றன. அவற்றில் 21 கி.மீ., நீள சுரங்கப்பாதைகள் நிலத்திற்கு கீழும், 6.4 கி.மீ., சுரங்கப்பாதை மேற்பரப்பிலும் அமைய உள்ளன.நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்ட முதலாவது சுரங்கப்பாதை பணிகள் கடந்த 2025 செப்., முடிவடைந்தது. தானே முதல் பாந்தரா குர்லா காம்ப்ளக்ஸ் வரையில் 5 கி.மீ.,நீளத்திற்கு இந்த சுரங்கப்பாதை அமைந்துள்ளன. அடுத்து பஹல்கரில் 1.39 கி.மீ., தூரத்திற்கு இடையிலான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.இதனிடையே, அடுத்த சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: புல்லட் ரயில் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. மலை சுரங்கப்பாதை எம்டி5 சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கிய திருப்புமுனையாகும். புல்லட் ரயில் திட்டத்தில் 7 மலை சுரங்கப்பாதைகளும், கடலுக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதையும் அமைய உள்ளது. புல்லட் ரயில் திட்டத்தில் 12 ரயில் நிலையங்கள் அமைகின்றன. குஜராத்தில் சபர்மதி முனையமாக செயல்படும். மும்பையில் பாந்தரா குர்லா காம்ப்ளக்ஸ் முனையமாக செயல்படும். 3 டெப்போக்கள் கட்டப்பட்டு வருகின்றன.மொத்தம் 508 கி.மீ., தூரத்துக்கு இரண்டு டெப்போக்கள் போதும். இருப்பினும், உத்தவ் தாக்கரே ஆட்சியில் அனுமதி மற்றும் ஒப்புதல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் 3 பெட்போக்கள் திட்டமிடப்பட வேண்டியதாகிவிட்டது. திட்டத்தை மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ