பெங்களூரு : பெங்களூரில் நேற்று முன்தினம் இரவு கொட்டி தீர்த்த கனமழையால், அடுக்குமாடி குடியிருப்புகள் தீவாக மாறின. வெள்ளக்காடான சாலைகளால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை துவங்கி இருப்பதை ஒட்டி, தலைநகர் பெங்களூரில் கடந்த சில தினங்களாக, இரவில் கனமழை பெய்கிறது. பகலில் வெயில் அடிக்கிறது. மாலை 4:00 மணிக்கு மேல், மழை வெளுத்து வாங்குகிறது.நேற்று முன்தினம் இரவு இந்திராநகர், ஹலசூரு, கெங்கேரி, விதான் சவுதா, சிவாஜி நகர், ராஜாஜி நகர், சாம்ராஜ்பேட், மல்லேஸ்வரம், ஜெயநகர் உட்பட நகர் முழுதும் கனமழை கொட்டி தீர்த்தது. 6 அடிக்கு தண்ணீர்
பெங்களூரு விமான நிலையம் செல்லும் சாலையில், எலஹங்கா கோகிலு கிராசில் உள்ள கேந்திரிய விஹார் அடுக்குமாடி குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது. தரைதளத்தில் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது. வாகன நிறுத்தத்தில் நின்ற கார்கள், இருசக்கர வாகனங்கள் மூழ்கின.முதல் தளத்தில் வசித்தவர்களை, ரப்பர் படகுகள் வாயிலாக, தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர். ரப்பர் படகில் செல்லும்போது, தண்ணீரில் தவறி விழுந்துவிட கூடாது என்பதற்காக, 'லைப் ஜாக்கெட்' கொடுக்கப்பட்டது.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பேத்தியான நாகூர் ரோஜா, 45, என்ற பெண்மணி, கேந்திரிய விஹார் அடுக்குமாடி குடியிருப்பில் தான் வசிக்கிறார். அவரும் ரப்பர் படகு வாயிலாக பத்திரமாக மீட்கப்பட்டார். டிராக்டரில் உணவு
எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத், ரப்பர் படகில் சென்று பாதிப்புகளை பார்வையிட்டார். உயரமான கட்டடங்களில் வசிக்கும் மக்களுக்கு, ரப்பர் படகுகள் வாயிலாக உணவு, தண்ணீர் எடுத்து சென்று வழங்கினார். கடந்த முறை, மழையில் சிக்கியவர்கள் டிராக்டர்கள் வாயிலாக மீட்கப்பட்டனர். ஆனால் இம்முறை டிராக்டர் செல்ல முடியாத அளவுக்கு, வெள்ளம் சூழ்ந்து உள்ளது.பேட்ராயனபுரா தொகுதியும், மழை பாதிப்பில் இருந்து தப்பவில்லை. டாடா நகர், பத்ரப்பா லே - அவுட்டுகளை வெள்ளம் சூழ்ந்தது. தரைதளத்தில் இருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள, ஹெப்பால் மேம்பாலத்தில் நேற்று மதியம், 3 கி.மீ.,க்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் அடித்த ஹாரன் விண்ணை பிளக்கும் அளவுக்கு இருந்தது.மழை, வெள்ளத்தால் நகரின் பெரும்பாலான சாலைகள் குளங்களாக மாறின. விதான் சவுதா அருகே கே.ஆர்.சதுக்கம் பகுதியில், 3 அடிக்கு தண்ணீர் தேங்கியது. பள்ளிகளுக்கு 'லீவு'
விமான நிலையம் அமைந்துள்ள தேவனஹள்ளியில் பெய்த மழையால், சாக்கடை கால்வாயில் இரண்டு கார்கள் அடித்து செல்லப்பட்டன. மழை காரணமாக காலை அலுவலகம் சென்று, மாலை வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் படாதபாடுபட்டனர். கனமழையால் நகரில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்புகின்றன. இந்த சூழலில், ''பெங்களூரில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும்,'' என, வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாட்டீல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நகரில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.துணை முதல்வர் மீது கோபம்'கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரு நகர வளர்ச்சி அமைச்சராக உள்ளார். நகரை, 'பிராண்டு பெங்களூராக' மாற்றப் போவதாக கூறுகிறார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகரில் சரியான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவில்லை. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும், மழை பாதிப்புகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை' என, மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.