உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைசூரு அரண்மனை வளாகத்தில் 21 முதல் 31 வரை மலர் கண்காட்சி

மைசூரு அரண்மனை வளாகத்தில் 21 முதல் 31 வரை மலர் கண்காட்சி

மைசூரு; மைசூரு அரண்மனை வாரியம் சார்பில் வரும் 21 முதல் 31ம் தேதி வரை மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.மைசூரு அரண்மனை வாரியம் துணை இயக்குனர் சுப்பிரமண்யா வெளியிட்டுள்ள அறிக்கை:மைசூரு அரண்மனை வாரியம் சார்பில் 10ம் ஆண்டு மலர் கண்காட்சி, வரும் 21 முதல் 31ம் தேதி வரை அரண்மனை வளாகத்தில் நடக்கிறது. கண்காட்சியை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார். மாவட்ட பொறுப்பு வகிக்கும் சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

25,000 பூந்தொட்டி

இந்தாண்டு மாரிகோல்டு, சால்வியா, தாஹியா, பெடுனியா, கிரிசான்தமம், கோலியஸ் உட்பட பல்வேறு வகையான, 25,000 அலங்கார பூந்தொட்டிகள் வைக்கப்பட உள்ளன.ரோஜா, பிங் பாங், கார்னேஷன்ஸ், ஜெர்பியா, அந்துாரியம், ஆர்கிட் உட்பட 35க்கும் மேற்பட்ட 6 லட்சம் பூக்கள் இடம் பெற உள்ளன. இந்த பூக்கள், ஊட்டியில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளன.புதுடில்லியில் உள்ள அக்சர்தாம் கோவில், 50 அடி அகலத்தில் 16 அடி நீளத்தில் 25 அடி உயரத்தில் மலர்களால் வடிவமைக்கப்பட உள்ளது. மஹாராஜா நால்வடி கிருஷ்ணராஜ உடையார், நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரா கோவில் ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரா, கழுகு, குட்டி யானை, ஆமை ஆகியவையும் வடிவமைக்கப்பட உள்ளன.

21 முதல் 25ம் தேதி

பண்டிப்பூர் பூங்காவை பிரதிபலிக்கும் வகையில் ஆறு விலங்குகள், நான்கு பறவைகளும் மலர்களால் வடிவமைக்கப்படுகிறது. தொப்படி வடிவில் 'செல்பி பாயின்ட்', மாம்பழம், கார்கில் போர் நினைவு மற்றும் 'பொம்மை வீடு' வடிவமைக்கப்பட உள்ளன. இத்துடன், மாநில அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களும் இடம் பெறுகின்றன.சுற்றுலா பயணியரை கவரும் வகையில் 21 முதல் 25ம் தேதி வரை தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. ஜெயசாமராஜ உடையார், தசரா திருவிழாவின் பழைய, புதிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியும், நால்வடி கிருஷ்ணராஜ உடையார் பற்றிய படமும் திரையிடப்படும். 2025ம் ஆண்டு காலண்டர் வெளியிடப்படும்.ஆலோவேரா, துளசி, மல்லிகை, வெற்றி உட்பட 500 மருத்துவ குணம் கொண்ட செடிகள், சிறப்பு விருந்தினர்கள், பார்வையாளர்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை