பக்தி பரவசம் தியானத்துடன் உணவு இது வேற மாதிரியான ஹோட்டல்
பொதுவாக ஹோட்டல்களில் சுவையான உணவு, சிற்றுண்டி கிடைப்பது சகஜம். ஆனால் ஆட்டம், தியானத்துடன் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும், ஊட்டச்சத்தான உணவு வினியோகிக்கும் ஹோட்டல் உள்ளது.பெங்களூரு ரூரல், தேவனஹள்ளி அருகில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் 'ஜாய் பார்க்' என்ற ஹோட்டல் உள்ளது. இது உடற்பயிற்சி, ஆட்டம், பஜனை நடத்த, அரட்டை அடிக்க சிறந்த இடமாகும். இது ஹோட்டல் மட்டுமல்ல, தியான மையமும் கூட. 'ஸ்ரீ ராம ஜெய ராமா' என்ற சுலோகம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.இங்கு வரும் வாடிக்கையாளர்கள் உடற்திறனை பலப்படுத்த பயிற்சி செய்யலாம். கேரம், செஸ், பரமபதம் உட்பட பல்வேறு விளையாட்டுகள் உள்ளன. சறுக்கி விளையாடுவது, ஊஞ்சல் என, விளையாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஆடியபடி, அரட்டை அடித்தபடி வடமாநில உணவு, சைனீஸ் உணவு என, வகை வகையான உணவுகள், சிற்றுண்டிகளை சுவைக்கலாம்.மசாலா டீ, பிளாக் டீ, இஞ்சி, துளசி டீ, லெமன் டீ, சாக்லெட் காபி என, பல வகையான பானங்கள், வெங்காய பக்கோடா, சில்லி கார்லிக், வெண்ணெய் பக்கோடா, வடாபாவ், மோமோஸ் போன்ற உணவுகளும் கிடைக்கின்றன. உடல் ஆரோக்கியத்தை காப்பாற்றும் சிறு தானிய உணவுகள் இங்கு கிடைப்பது தனிச்சிறப்பு.நகரவாசிகள் விரும்பி சாப்பிடும் சாண்ட்விச், பர்கர், கிளாசிக் பீட்சாவும் இங்கு கிடைக்கின்றன - நமது நிருபர் -.