முதன் முறையாக காங்கிரசை எதிர்கொள்ளும் ம.ஜ.த.,
கோலார் லோக்சபா தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.ஜ.த.,வுக்கு 'சீட்' உறுதியாகி உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அதன் வேட்பாளர் யார் என்பதும் இரண்டொரு நாளில் தெரிந்து விடும்.கோலார் லோக்சபா தொகுதியில் 1952, 1957, 1962ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரசின் தொட்ட திம்மையா எம்.பி.,யானார். 1967 லோக்சபா தேர்தலில் காங்கிரசின் ஜி.ஒய்.கிருஷ்ணன் எம்.பி., ஆனார். 1972, 1977, 1980 வரையில் அவரே எம்.பி.,யாக இருந்தார். டில்லி செல்வாக்கு
இதுவரை கோலார் தொகுதியில் காங்கிரஸ் அசைக்க முடியாத கட்சியாக இருந்தது. 1984 தேர்தலில் மாற்றம் ஏற்பட்டது. முதல் முறையாக காங்கிரசை தோற்கடித்து, ஜனதா கட்சியின் டாக்டர் வெங்கடேஷ் வென்றார். காங்கிரசின் சித்லகட்டாவை சேர்ந்த வக்கீல் கே.எச்.முனியப்பா, 1991 தேர்தலில் எம்.பி.,யானார். தொடர்ந்து, 1996, 1998, 1999, 2004, 2009, 2014 வரை தொடர்ந்து 28 ஆண்டுகள் இவரே எம்.பி.,யாக கோலாச்சினார். டில்லியிலும் செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். மத்திய இணை அமைச்சராக இருந்தார்.கோலார் லோக்சபா தொகுதியில் முடி சூடா மன்னராக திகழ்ந்து, மற்ற காங்கிரஸ் தலைவர்களை அலட்சியப்படுத்தினார். இதனால், காங்கிரஸ் அதிருப்தியாளர்கள், முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் தலைமையில் ஒன்று கூடினர். இதன் காரணமாக 2019 தேர்தலில் பா.ஜ.,வின் முனிசாமியிடம் முனியப்பா முதல் முறையாக தோற்று போனார்.அந்த தேர்தலில் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி இருந்தும், முனியப்பாவின் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.இந்நிலையில், தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.ஜ.த., சேர்ந்துள்ளது. கோலார் தொகுதி ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி நேற்று முன்தினம் ஹாசனில் அறிவித்தார். ம.ஜ.த.,வினர் உற்சாகம்
இதனால், கோலார் தொகுதியில் ம.ஜ.த.,வினர் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். இக்கட்சியில் யார் வேட்பாளர் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஏற்கனவே பங்கார்பேட்டை தொகுதியில் இருமுறை போட்டியிட்டு 40 கோடி ரூபாய் செலவழித்த மல்லேஸ் பாபு, தனக்கு பொருளாதாரத்தில் பின்னடைவு உள்ளதாக தெரிவித்துள்ளார்.முல்பாகல் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சம்ருத்தி மஞ்சுநாத், தனக்கு விருப்பம் இல்லை என கூறி விட்டார். தேவனஹள்ளி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., நிசர்கா நாராயணசாமி போட்டியிடுவார் என கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.காங்கிரசில் மீண்டும் முனியப்பாவா அல்லது அவர் பரிந்துரைத்த நபரா அல்லது ராஜ்யசபா முன்னாள் எம்.பி., எல்.ஹனுமந்தப்பாவா என்பது தெரியவில்லை. இத்தொகுதியில், முதன் முறையாக காங்கிரசுடன் ம.ஜ.த., மோத உள்ளது- நமது நிருபர் .