உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானங்களுக்கு மிரட்டல் விடுப்போருக்கு... ஆயுள்?

விமானங்களுக்கு மிரட்டல் விடுப்போருக்கு... ஆயுள்?

புதுடில்லி “விமானங்களுக்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களுக்கு, ஆயுள் தண்டனை வழங்க சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது,'' என, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.நாட்டில், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா என அனைத்து நிறுவனங்களின் விமானங்களுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது; விசாரணையில், அது போலியானது என கண்டுபிடிக்கப்படுகிறது.கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 100க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பயணியர் பாதிக்கப்படுவதோடு, விமான நிறுவனங்களுக்கும் எரிபொருள் வீண் செலவு என, பல கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்படுகிறது.

நெறிமுறைகள்

இந்த விவகாரம் தொடர்பாக, தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில், டில்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இதன்பின், அமைச்சர் ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த ஒரு வாரமாக, விமானங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அவை போலி வெடிகுண்டு மிரட்டல்களாக இருந்த போதும், பாதுகாப்பில் நாங்கள் எந்த சமரசமும் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்துடன், சிவில் விமான பாதுகாப்பு பணியகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. இது போன்ற அச்சுறுத்தல்கள் நடக்கும்போது, அவற்றை சரியான முறையில் கையாள வேண்டும். இதற்கென சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளன.விமான பாதுகாப்பு விதிகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துச் சட்டம் - 1982 ஆகியவற்றில், திருத்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். தற்போது இந்த சட்டத்தின் மூன்றாவது பிரிவின்பிடி, விமானங்களுக்குள் வன்முறையில் ஈடுபட்டு, பயணியரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோருக்கு, ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். இதில் திருத்தம் செய்து, சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாக விமானங்களுக்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இது குறித்து சட்ட மற்றும் உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்து வருகிறோம். மேலும், மிரட்டல் விடுப்பவர்கள் விமானத்தில் பயணம் செய்வதற்கான தடை பட்டியலிலும் சேர்க்கப்படுவர். மிரட்டல் விடுப்போரை, நீதிமன்ற உத்தரவின்றி கைது செய்யவும், விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகனுடன், சிவில் விமான பாதுகாப்பு பணியகத்தின் இயக்குனர் ஜெனரல் சுல்பிகர் ஹசன், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை இயக்குனர் ஜெனரல் ராஜ்விந்தர் சிங் பாட்டி ஆகியோர், நேற்று ஆலோசனை நடத்தினர்.

ஏர் இந்தியாவுக்கு பயங்கரவாதி மிரட்டல்

அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான், 'சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்' என்ற அமைப்பை துவக்கி நடத்தி வருகிறார். மத்திய உள்துறை அமைச்சகம், இவரை தேடப்படும் பயங்கரவாதியாக 2020ல் அறிவித்தது. தேசத்துரோகம், பிரிவினைவாதத்தை துாண்டுதல் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவர் மீது வழக்குகள் உள்ளன.பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஆதரவுடன் செயல்படும் பன்னுான், அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டனில் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத செயல்களை துாண்டுவது, சீக்கிய இளைஞர்களை இந்தியாவுக்கு எதிராக திசை திருப்புவது உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாக நம் உளவுத்துறைஎச்சரித்துள்ளது.இந்நிலையில், 'ஏர் - இந்தியா' விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக, குர்பத்வந்த் சிங் பன்னுான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984ல் நடந்த கலவரத்தின் 40ம் ஆண்டு நினைவு தினம் வரப்போகிறது. நவ., 19ம் தேதிக்கு பின், 'ஏர் - இந்தியா' விமானங்களின் சேவை தடைபடக்கூடும்; அதன் மீது தாக்குதல்கள் நடத்தப்படும். எனவே, சீக்கியர்கள் நவ., 19க்கு பின், ஏர் - இந்தியா விமானங்களில் பயணிப்பதை தவிர்க்கவும்.இவ்வாறு அவர் கூறினார்.பன்னுான், இதே போன்ற மிரட்டலை கடந்த ஆண்டும் விடுத்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை