புதுடில்லி: அமெரிக்காவுக்கு சென்று உயர்கல்வி பயில விரும்பும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் கணிசமாக குறைந்திருப்பதாக சர்வதேச கல்வி சேவைகள் வழங்கும் 'ஐ.டி.பி., எஜுகேஷன்' நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் கனடாவில் பயில விரும்புவோரின் எண்ணிக்கையும் பெருமளவில் சரிந்திருப்து தெரிய வந்துள்ளது. வெளிநாட்டில் தங்கி படிக்க விரும்பும் மாணவர்களுக்காக, 1969ல் ஆஸ்திரேலிய அரசு துவங்கியது தான் ஐ.டி.பி., எட்ஜுகேஷன். இந்நிறுவனம் சர்வதேச கல்வி சேவைகளை உலகம் முழுதும் வழங்கி வருகிறது. மாணவர்கள் படிக்க விரும்பும் பட்டம், பிரிவு, பல்கலை, தேர்வு, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தாக்கல் செய்வது, விசா நடைமுறை மற்றும் ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, அயர்லாந்து, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற பிரபலமான நாடுகளில் தங்கி படிப்பதற்கான முன் தயாரிப்பு திட்டமிடுதல் ஆகியவற்றுக்கும் இந்நிறுவனத்தின் நிபுணர்கள் இலவசமாக வழிகாட்டி வருகின்றனர். ஆர்வம் குறைவு ஐ.இ.எல்.டி.எஸ்., எனப்படும் ஆங்கில மொழிப் புலமை தேர்வையும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு சென்று மேற்படிப்பு பயிலும் ஆர்வம், மாணவர்களிடையே குறைந்து வருவதாக ஐ.டி.பி., எஜுகேஷனின் தெற்கு ஆசியா, கனடா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கான பிராந்திய இயக்குநர் பியுஷ் குமார் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்புகள் உள்ளிட்ட சர்வதேச அரசியல் நிலவரம், மாணவர்களின் எதிர்கால கல்வி திட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் விவரிக்கிறார். இது குறித்து பியுஷ் குமார் கூறியதாவது: சர்வதேச அரசியல் சூழல் குறித்து நாம் விவாதித்தால், முதலில் அமெரிக்காவை பற்றி தான் கவலைப்பட வேண்டியிருக்கிறது. கடந்த 6 முதல் 12 மாதங்கள் வரை, அமெரிக்காவுக்கு சென்று படிக்க வேண்டும் என்ற மாணவர்களின் திட்டத்தில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டிரம்ப் அதிபராக பதவியேற்பதற்கு முன்பு இருந்தே மாணவர்கள் மத்தியில் இந்த தாக்கம் ஏற்பட துவங்கியது. கடந்த ஜூன் மாதத்திற்கு பின் எடுத்துக் கொண்டால், விசா அனுமதி விகிதம் பெருமளவு சரிவு அடைந்துள்ளது. சரிவு அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், ஏதோ மாற்றம் செய்யப் போகிறார் என்ற ஊகங்கள் பரவியது, அங்கு சென்று படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மாணவர்களிடையே குறைத்துவிட்டது. அந்த வகையில் கடந்த 2024, மே மாதத்துடன், 2025 மே, மாதத்தை ஒப்பிட்டு பார்த்தால், அமெரிக்காவுக்கு சென்று படிக்க வேண்டும் என்ற மாணவர்களின் விசாரிப்புகள் 46.4 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே போல், கனடாவுக்கு சென்று படிக்க வேண்டும் என்ற மாணவர்களை விசாரிப்புகள், கடந்த இரு ஆண்டுகளில் 70 முதல் 75 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதற்கு காரணம் கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இந்தியாவுடன் அவர் மோதல் போக்கை கடைப்பிடித்ததால், கனடாவுக்கு சென்று படிக்க வேண்டும் என்ற இந்திய மாணவர்களின் ஆர்வம் வெகுவாக குறைந்து போனது. இவ்வாறு அவர் கூறினார்.