நடிகையிடம் ரூ.77 லட்சம் அபேஸ் முன்னாள் உதவியாளர் கைது
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் கையெழுத்தை போலியாக போட்டு, 77 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, அவரது முன்னாள் பெண் தனி உதவியாளரை மும்பை போலீசார் கைது செய்தனர். பாலிவுட் திரைப்பட நடிகையும், நடிகர் ரன்பீர் கபூரின் மனைவியுமான ஆலியா பட், 32, 'எடர்னல் சன்ஷைன் புரொடக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம், வேதிகா பிரகாஷ் ஷெட்டி, 32, என்பவர் தனி உதவியாளராக பணியாற்றினார்.ஆலியா பட்டின் நிதி ஆவணங்கள் மற்றும் பணம் கையாள்வது தொடர்பான வேலையை செய்து வந்த வேதிகா, போலி ரசீதுகளை உருவாக்கி உள்ளார். இரண்டு ஆண்டுகளில், ஆலியாவின் கையெழுத்தை போலியாக இட்டு, 77 லட்சம் ரூபாய் வரை வேதிகா மோசடி செய்ததாக கூறப்படுகிறது. ஆலியாவின் தாய் சோனி ரஸ்தான் அளித்த புகாரின் அடிப்படையில், சில மாதங்களுக்கு முன் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குற்றவியல் மற்றும் நம்பிக்கை மோசடி தொடர்பான பிரிவுகளின் கீழ், மும்பை ஜுஹூ போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் வேதிகா தலைமறைவானார். எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்ட ஐந்து மாதங்களுக்குப் பின் வேதிகா ஷெட்டி பெங்களூரில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரை, இன்று வரை போலீஸ் காவலில் விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.