காங்., முன்னாள் எம்.பி., உதித் ராஜ் அரசு பங்களாவில் இருந்து வெளியேற்றம் பொருட்களை தூக்கி வெளியே வைத்தனர்
புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான உதித் ராஜ், அரசு பங்களாவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். வீட்டில் இருந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பங்களாவுக்கு வெளியே வைக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் உதித் ராஜ். கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை வடமேற்கு டில்லி லோக்சபா தொகுதி எம்.பி.,யாக பதவி வகித்தார். இவரது மனைவி சீமா ராஜ். வருமான வரித்துறையில் முதன்மை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுடில்லி பண்டாரா பார்க் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் உதித்ராஜ் தன் மனைவி மாமனாருடன் வசித்தார். இந்த பங்களா ஐ.ஆர்.எஸ்., அதிகாரி என்ற முறையில் சீமா ராஜூக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி சீமா பணி ஓய்வு பெற்றார். எனினும் அடுத்த ஆறு மாதங்கள் வரை அரசு பங்களாவில் வசிக்க விதிமுறை இருந்தது. எனவே, மே 31ம் தேதி வரை பங்களாவுக்கான வாடகையை சீமா செலுத்தியிருந்தார். அவகாசம் முடிந்து ஐந்து மாதங்கள் ஆகியும் உதித் ராஜ் தம்பதி பங்களாவை காலி செய்யவில்லை. இந்நிலையில், நகர்ப்புற வளர்ச்சித் துறை ஊழியர்கள் உதித் ராஜ் பங்களாவுக்கு வந்து, பொருட்களை தூக்கி வெளியே வைத்தனர். அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்தி, பங்களாவுக்கு பூட்டுப் போட்டு விட்டுச் சென்றனர். இதுகுறித்து, உதித்ராஜ் கூறியதாவது: நான் தங்கியிருந்த பங்களாவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளேன். என் உடைமைகள் தூக்கி தெருவில் வீசினர். இந்த பங்களாவை காலி செய்வது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அடுத்த விசாரணை வரும்28ம் தேதி நடக்கிறது. இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் அவசரம் அவசரமாக என்னை வெளியேற்றியுள்ளனர். நான் தலித் சமூகத்தை சேர்ந்தவன் என்பதற்காக என் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல உயர் சாதியினர் அவகாசம் முடிந்தும் ஆண்டுக்கணக்கில் அரசு பங்களாக்களில் வசிக்கின்றனர். மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டாரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. துறையின் எந்த உயர் அதிகாரியுடனும் பேச முடியவில்லை. இது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். உதித்ராஜ் மனைவியும், ஓய்வு பெற்ற வருமானவரித் துறை அதிகாரியுமான சீமா ராஜ் கூறியதாவது: மே 31ம் தேதியுடன் அவகாசம் முடிந்தாலும் வேறு பங்களா தேடுவதற்காக நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வரை அவகாசம் கேட்டு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையின் எஸ்டேட் இயக்குனரகத்துக்கு இரண்டு முறை கடிதம் அனுப்பினேன். மானியம் இல்லாத வாடகை செலுத்துவதாகவும் கூறியிருந்தேன். ஆனால், இரண்டு கடிதங்களுக்குமே பதில் வரவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் செப்டம்பர் மாதம் முறையிட்டேன். விசாரணை வரும் 28ம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதற்குள் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதை நீதிமன்றத்தில் முறையிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.