பாட்னா: பீஹாரில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் உட்பட மூன்று பேரை, பா.ஜ., தலைமை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. பீஹாரில், 243 தொகுதிகளுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி, 202 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், தேர்தல் சமயத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, அர்ரா தொகுதி முன்னாள் எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.கே.சிங், எம்.எல்.சி., அசோக் அகர்வால் மற்றும் கட்டிஹார் மேயர் உஷா அகர்வால் ஆகியோரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி, பா.ஜ., தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக பீஹார் மாநில பா.ஜ., - பொறுப்பாளர் அரவிந்த் ஷர்மா, விளக்கம் கேட்டு அவர்கள் மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்ப தாவது: கட்சி கட்டுப்பாடுகளை மீறி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளீர்கள். கட்சி மேலிடம் இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. கட்சியின் பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கட்சியில் இருந்து உங்களை தற்காலிகமாக நீக்குகிறோம். எதிர்காலத்தில் உங்களை ஏன் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கக்கூடாது என்பதற்கு ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பீஹாரைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஆர்.கே.சிங், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் உள்துறை செயலராக பதவி வகித்தார். 2013ல் பா.ஜ.,வில் சேர்ந்து 2014, 2019 என தொடர்ச்சியாக அர்ரா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.,யானார். 2017ல் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய மின்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார். கடந்த, 2024 லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தது முதலே, பா.ஜ.,வையும் பீஹார் அரசையும் ஆர்.கே.சிங் கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, பீஹார் மாநில பா.ஜ., தலைவர் தீலிப் ஜெய்ஸ்வாலுக்கு எதிராக கருத்து கூறி வந்தார். இதைத் தொடர்ந்து அவரை ஆறு ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி, பா.ஜ., தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.