உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாஜி எம்.பி., பிரக்யா உட்பட 7 பேரும் விடுதலை மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு

மாஜி எம்.பி., பிரக்யா உட்பட 7 பேரும் விடுதலை மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு

மும்பை:மஹாராஷ்டிராவின் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பில், குற்றஞ்சாட்டப்பட்ட பா.ஜ., முன்னாள் எம்.பி., சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட அனைவரையும் என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. மஹாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ளது மாலேகான். விசைத்தறி தொழிலுக்கு பெயர் பெற்ற நகரம். இங்கு, 2008 செப்., 29ல் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. 6 பேர் பலி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான இங்கு, புனித நோன்பு மாதமான ரம்ஜானில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், ஆறு பேர் கொல்லப்பட்டனர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பா-.ஜ., முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித், ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய், அஜய் ரஹிர்கர், சமீர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி மற்றும் சுதாகர் திவிவேதி ஆகியோர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டனர். இந்திய தண்டனை சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், 'உபா' எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றவியல் சதி மற்றும் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மஹாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படை விசாரித்து வந்த இந்த வழக்கு, 2011ல் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. 2018ல் துவங்கிய வழக்கு விசாரணை, கடந்த ஏப்., 19ல் முடிவடைந்தது. குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பிரக்யா சிங் தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், 323 அரசு தரப்பு சாட்சிகள், எட்டு பாதுகாப்புத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். பின், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டது. இழப்பீடு இறுதிகட்ட விசாரணையில், என்.ஐ.ஏ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், 'இந்த குண்டுவெடிப்பு முஸ்லிம் சமூகத்தை அச்சுறுத்தவும், வகுப்புவாத பதற்றத்தை அதிகரிக்கவும், மாநிலத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தவும் நடத்தப்பட்டது தெளிவாக தெரிகிறது. 'குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும், இந்த பெரிய சதியில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்' என, வாதிட்டார். இதையடுத்து, சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோதி வழங்கிய தீர்ப்பு: பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை, ஏனென்றால் எந்த மதமும் வன்முறையை ஆதரிக்காது. வெறும் கருத்து மற்றும் தார்மீக ஆதாரங்களை வைத்து நீதிமன்றம் யாரையும் தண்டிக்க முடியாது; உறுதியான ஆதாரங்கள் இருக்க வேண்டும். குண்டுவெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிரசாத் புரோஹித் ஆர்.டி.எக்ஸ்., வெடிகுண்டு கொண்டு வந்ததற்கான ஆதாரமும் இல்லை. அதேபோல், குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் மருத்துவ சான்றிதழ்களில் மோசடி இருப்பதாக தெரிகிறது. ... மாலேகானில் மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு வைக்கப்பட்டதை அரசு தரப்பு நிரூபிக்கவில்லை. எனவே குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரையும் இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது. குண்டுவெடிப்பில் பலியான ஆறு பேரின் குடும்பங்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்த அனைவருக்கும் 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில், 17 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பளிக்கப்பட்டது. மன்னிப்பு கேட்க வேண்டும்! சிறுபான்மையினரை திருப்திபடுத்த, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அமைக்கப்பட்ட போலி ஹிந்து பயங்கரவாத கதை, நீதிமன்ற உத்தரவின் வாயிலாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களிடமும், ஹிந்து சமூகத்திடமும் காங்கிரஸ் மன்னிப்பு கேட் க வேண்டும். இந்த வழக்கில், உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை போலீசாரும், விசாரணை அதிகாரிகளும் வெளிப்படுத்து வர். -- தேவேந்திர பட்னவிஸ், மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ., 'ஹிந்துத்வா வென்றது' நீதிபதி தீர்ப்பை அறிவித்ததை அடுத்து அவரிடம், இந்த வழக்கால் எதிர்கொண்ட அவமானம் குறித்து பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர் கூறியதாவது: வழக்கு துவங்கியதில் இருந்தே நான் நிரபராதி என கூறி வந்தேன். யாரும் நம்பவில்லை. விசாரணையில் யாரையாவது அழைத்தால், அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். என்னை அழைத்தனர், கைது செய்தனர், சித்ரவதை செய்தனர். இது, என் வாழ்க்கையையே அழித்து விட்டது. நான் ஒரு சன்னியாசி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு குற்றவாளி பட்டம் சூட்டப்பட்டது. யாரும் எங்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை. நான் உயிருடன் இருக்கிறேன்; ஏனென்றால் நான் ஒரு சன்னியாசி. அவர்கள் சதி திட்டத்தின் வாயிலாக காவியை அவமானப்படுத்தினர். இன்று காவி வென்றது; ஹிந்துத்வா வென்றது. குற்றவாளிகளை இறைவன் தண்டிப்பான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை