உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.6,200 கோடி பண மோசடி வழக்கு யூகோ வங்கி முன்னாள் தலைவர் கைது

ரூ.6,200 கோடி பண மோசடி வழக்கு யூகோ வங்கி முன்னாள் தலைவர் கைது

புதுடில்லி : பண மோசடி வழக்கில், யூகோ வங்கியின் முன்னாள் தலைவர் சுபோத் குமார் கோயலை அமலாக்கத் துறையினர் நேற்று கைது செய்தனர். மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவை தலைமையிடமாக வைத்து, பொதுத் துறை வங்கியான யூகோ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைவராக சுபோத் குமார் கோயல் பதவி வகித்த போது, கொல்கட்டாவைச் சேர்ந்த, 'கான்காஸ்ட் ஸ்டீல் அண்டு பவர் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனத்துக்கு, 6,210 கோடி ரூபாய் அளவுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கப்பட்டது. அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி, அந்நிறுவனத்துக்கு கடன் வழங்கியதும், இதற்காக, அந்நிறுவனத்திடம் இருந்து, கோடிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதும் தெரிய வந்தது. லஞ்ச பணத்தை பயன்படுத்தி, பல்வேறு இடங்களில் அசையா சொத்துக்களை சுபோத் குமார் கோயல் வாங்கினார். மேலும், தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் போலி நிறுவனங்களை துவக்கி, அவற்றில் பணத்தை முதலீடு செய்து அவர் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த முறைகேடு குறித்து, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்த நிலையில், அதில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. கடந்த 2024 டிசம்பரில், இந்த மோசடி தொடர்பாக, கான்காஸ்ட் ஸ்டீல் அண்டு பவர் லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி சஞ்சய் சுரேகா கைது செய்யப்பட்டதோடு, அந்நிறுவனத்தின், 510 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டன.இந்த பண மோசடி தொடர்பாக, யூகோ வங்கி முன்னாள் தலைவர் சுபோத் குமார் கோயல் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில், கடந்த ஏப்ரலில் அதிரடி சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்நிலையில் இந்த வழக்கில், சுபோத் குமார் கோயலை, கடந்த 17ல் கைது செய்ததாக அமலாக்கத் துறையினர் நேற்று தெரிவித்தனர். நாளை அவரை காவலில் விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ராஜா
மே 22, 2025 07:19

வடக்கன்ஸ் எல்லாம் அப்படி தான்


அப்பாவி
மே 20, 2025 10:07

இந்த அண்ணாச்டி யுகோ வங்கிக்கு தலைவரா வரும் முன்னே வங்கிகள் ஏமாற்றுவதைக் கண்காணிக்கும் விஜிலன்ஸ் கமிஷன் தலிவரா இருந்தாரு. எல்லா ஃப்ராடுத்தனங்களையும் கவனிச்சு தடையமே இல்லாம பினாமி கம்பெனிகள் மூலம் பணத்த ஆட்டையப் போட்டிருக்காரு. ரொம்ப நல்லவரு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை