அல் - குவைதா பயங்கரவாதிகள் நால்வர் கைது: முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த சதி
ஆமதாபாத்: அல் - குவைதா பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். ஜம்மு - காஷ்மீர் மற்றும் அண்டை நாடுகளான வங்கதேசம், மியான்மரில் அல் - குவைதா பயங்கரவாத அமைப்பு தங்கள் கிளைகளை பரப்ப முயற்சி செய்து வருவதாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சில தினங்களுக்கு முன் எச்சரித்திருந்தது. இங்கு, 200 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் தகவல் தெரிவித்தது. இதை தொடர்ந்து, நம் நாட்டின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், அல் - குவைதா பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இரண்டு பேர் குஜராத்திலும், ஒருவர் டில்லியிலும், மற்றொருவர் நொய்டாவிலும் கைதாகி உள்ளனர். பிடிபட்ட நான்கு பேரும் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக பயங்கரவாத செயல்களுக்கு ஆட்களை திரட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த நான்கு பேருக்கும் பாகிஸ்தானுடனும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்தியா முழுதும் முக்கிய இடங்களில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வந்ததையும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.