ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சடலமாக மீட்பு: மஹாராஷ்டிராவில் அதிர்ச்சி
நாந்தேட்: மஹாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் இரு வெவ்வேறு இடங்களில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மஹாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டத்தில் இன்று (டிசம்பர்25) ஒரு விவசாயி, அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இரண்டு வெவ்வேறு இடங்களில் சடலமாக மீட்கப்பட்டனர். இது கூட்டுத் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:தற்கொலை குறித்து தகவல் அறிந்து முட்கேட் வட்டத்தில் உள்ள ஜவாலா முரார் கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டில் சென்று பார்க்கும்போது, இரு சடலங்கள் இருந்தன. ஒருவர் ரமேஷ் சோனாஜி லாகே 51, அவரது மனைவி ராதாபாய் லாகே 45, என இரு உடல்கள் ஒரு கட்டிலில் கண்டெடுக்கப்பட்டன.அதைத் தொடர்ந்து, அவர்களது மகன்களான உமேஷ் 25, பஜ்ரங் 23, ஆகியோரின் உடல்கள் அருகிலுள்ள ரயில் தண்டவாளங்களில் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் அதிவேக ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.உயிரிழந்த உமேஷ் லாகே, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் முத்கேத் தாலுகா முன்னாள் துணைத் தலைவராக இருந்துள்ளார். இக்குடும்பம் விவசாயப் பின்னணியைக் கொண்டது.தற்கொலைக்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், விவசாயம் சார்ந்த கடன் சுமை அல்லது நிதி நெருக்கடி காரணமாக இந்த விபரீத முடிவை அவர்கள் எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்.இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.