| ADDED : ஜன 14, 2025 06:44 AM
பெங்களூரு: பெங்களூரு ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் ஐஸ்வர்யா கவுடா, 34. இவர், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, நந்தினி லே -- அவுட்டில் உள்ள நகைக் கடையில் 8 கோடி ரூபாய்க்கு நகை வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்தார்.நகைக்கடை உரிமையாளர் வனிதா அளித்த புகாரில் ஐஸ்வர்யா, அவரது கணவர் ஹரிசை போலீசார் கைது செய்தனர். தற்போது இருவரும் ஜாமினில் உள்ளனர்.இவர்கள் மீது மாண்டியா மேற்கு, ஆர்.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் தலா ஒரு வழக்குப் பதிவாகி உள்ளது.ஐஸ்வர்யாவுக்கும், தார்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னிக்கும் இடையே பணப்பரிமாற்றம் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது.ஐஸ்வர்யாவுக்கு சொந்தமான சொகுசு காரை வினய் குல்கர்னி பயன்படுத்தி வந்தார். அந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில் போலீஸ் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஐஸ்வர்யாவுக்கு அரசியலில் ஈடுபட்டு எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக தன்னை வசதி படைத்தவர் போன்று காட்டிக் கொள்ள நினைத்தார். முன்னாள் எம்.பி., சுரேஷ் தங்கை என்று கூறி பல இடங்களில் நகை, பணத்தை மோசடி செய்துள்ளார்.நகைகளை விற்றுக் கிடைத்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளார். இதனால் அவரை பணக்காரர் என்றே நிறைய பேர் நம்பியுள்ளனர். அன்னம்மா பூஜை நடத்த லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார். வினய் குல்கர்னியை பூஜைக்கு அழைத்து வந்து, அரசியல்வாதிகளுடனும் தனக்கு நல்ல தொடர்பு உள்ளது என்பதை காட்டியுள்ளார்.