உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க நிதியா?: டிரம்பின் பேச்சுக்கு அமெரிக்க துாதரகம் மறுப்பு

இந்தியாவில் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க நிதியா?: டிரம்பின் பேச்சுக்கு அமெரிக்க துாதரகம் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி இந்தியாவில் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க 182 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், அதை டில்லியில் உள்ள அமெரிக்க துாதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். அதன்படி ஏற் கெனவே 25 சதவீத வரி அமலான நிலையில், வரும் 27ம் தேதி முதல் எஞ்சிய 25 சதவீத வரி அமலுக்கு வருகிறது. இதனால், இருநாட்டு உறவில் உரசல் ஏற்பட்டுள்ளது. இந்த வரி அறிவிப்புக்கு முன், அமெரிக்க அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த நிலையில், இந்தியாவில் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க, யு.எஸ்.ஏ.ஐ.டி., எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சிக்கான முகமை மூலம் 182 கோடி நிதியுதவி வழங்கப்பட்டதாக டிரம்ப் கூறினார். சர்வதேச அளவில் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக வளர்ந்து வரும் நிலையில், இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டுமா எனவும் டிரம்ப் கேள்வி எழுப்பியிருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த பேச்சால், இந்தியாவில் பா.ஜ., - காங்., இடையே மோதல் வெடித்தது. தேர்தலில் வெற்றி பெற வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டதாக இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டன. 2012ல் பெற்ற இந்த நிதியை வைத்து தா,ன் 2014 தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதனால், இந்தியாவில் இந்த விவகாரம் பற்றி எரிந்தது. இந்நிலையில், டில்லியில் உள்ள அமெரிக்க துாதரகம், அப்படியொரு நிதியுதவி இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு அமெரிக்க துாதரகம் கடிதம் அனுப்பியதாக பார்லி., மழைக்கால கூட்டத் தொடரில், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தகவல் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.பி., ஜான் பிரிட்டாஸின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அமெரிக்க துாதரகத்தின் கடித விவகாரத்தை வெளியிட்டிருந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் செலவழிக்கும் நிதி தொடர்பான விபரங்கள் குறித்து அமெரிக்க துாதரகம் கடந்த ஜூலை 2ம் தேதி சில தரவுகளை பகிர்ந்து கொண்டது. அதில், இந்தியாவில் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க 182 கோடி ரூபாய் செலவிட்டதாக டிரம்ப் கூறிய தகவலில் உண்மை இல்லை என கூறியுள்ளது. ஓட்டுசதவீதத்தை அதிகரிக்க கோரி, யு.எஸ்.ஏ.ஐ.டி.,யிடம் இருந்து எந்த நிதியையும் டில்லியில் உள்ள அமெரிக்க துாதரகம் பெறவில்லை. மேலும், அந்த அளவுக்கான தொகையையும் செலவழிக்கவில்லை என தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அருண் பிரகாஷ் மதுரை
ஆக 23, 2025 09:56

அந்த நிதி மறைமுகமாக கிறிஸ்தவ ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க வழங்கி இருப்பார்கள்.. மதம் மாற்றும் கும்பல்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு இருக்கும்.. உளறு வாய் ட்ரம்ப் என்ன நிதி எதற்கு நிதி என்று தெரியாமல் பொது வெளியில் உண்மையை உளறி விட்டார் என்று நினைக்கிறேன்...


N.Purushothaman
ஆக 23, 2025 06:28

ட்ரம்பின் குரலாக காங்கிரஸ் கட்சி மாறுவது கடைந்தெடுத்த பச்சோந்தித்தனம் ..


Kasimani Baskaran
ஆக 23, 2025 05:09

இந்த நிதி எந்த என் ஜி ஓ வுக்கு போனது என்று சொன்னால் அதன் தாக்கம் என்னவென்று புரிந்து கொள்ள முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை