இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் வெற்றி பெறும்
பெங்களூரு: ''இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களும் வெற்றி பெறும்,'' என, தொழில்நுட்ப மாநாட்டில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் நம்பிக்கை தெரிவித்தார்.பெங்களூரு அரண்மனை மைதானத்தில், கர்நாடக தகவல் தொழில்நுட்ப துறையின் 2வது நாள், தொழில்நுட்ப மாநாடு நேற்று நடந்தது. இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது:ராக்கெட் சென்சார் தயாரிப்பில் நம்நாடு, கணிசமான அளவு முதலீடு செய்யும் வேளையில், கார் சென்சார்களையும் உள்நாட்டிலேயே தயாரிக்கலாம். உற்பத்தி செலவுகள் குறையும். உற்பத்தியை அதிகப்படுத்தினால் மட்டுமே நம்பகத்தன்மையை அடைய முடியும். நம்நாட்டின் விண்வெளி துறையை வரும் நாட்களில் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் தீவிரம் அடையும்.விண்வெளி துறை வளர்ச்சியில் முதலாவது அப்ஸ்ட்ரீம், இரண்டாவது மிட்ஸ்ட்ரீம், மூன்றாவது கீழ்நிலை ஆகிய பிரிவுகள் உள்ளன. அப்ஸ்ட்ரீம் செயற்கைக்கோள்கள் உற்பத்தி மற்றும் ஏவுதலுடன் வருகிறது.விண்வெளி துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகளை மிட்ஸ்ட்ரீம் உள்ளடக்கியது. திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தினால், அது விண்வெளி தொழில்நுட்பத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன், கூட்டுறவு விண்வெளி திட்டங்களை மேற்கொள்வது, உலக அளவில் சிறப்பான இடத்தை நாம் பெற உதவும். சந்திரயான் - 3 திட்டம்; ஆதித்யா - எல்1 திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன. இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்களும் வெற்றி பெறும்.மனிதர்களை 2026ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு அனுப்புவது, 2040க்குள் சந்திரனில் மனிதனை இறக்குவது உள்ளிட்ட இலக்குகளை நிர்ணயித்துள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.பின், விண்வெளி கொள்கை தொடர்பான புத்தகத்தை இஸ்ரோ தலைவர் சோம்நாத், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே உள்ளிட்டோர் வெளியிட்டனர்.