கூரியரில் வந்த கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
புதுடில்லி:பீஹார் மாநிலத்தில் இருந்து, 'கூரியர்' வாயிலாக கஞ்சா கடத்தி, டில்லியில் விற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டு, 51 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தெற்கு டில்லியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நடமாட்டம் குறித்து போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. சாகேத் அருகே சத்புலா ஜீல் கிர்கி விரிவாக்கப் பகுதியில், 8ம் தேதி போலீசார் தீவிரமாகக் கண்காணித்தனர். மாலை 4:30 மணிக்கு அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை மறித்து சோதனை நடத்தினர். அதில் இருந்த 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ரவி ரோஷன் மற்றும் தீரேந்தர் சிங் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். பீஹார் மாநிலத்தில் இருந்து, சந்தன் என்பவர் கூரியர் வாயிலாக டில்லியில் வசிக்கும் ரவிகுமார் உள்ளிட்டோருக்கு கஞ்சா அனுப்புவதாக இருவரும் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, ரவிகுமார் கைது செய்யப்பட்டார் . மேலும், கடந்த 12ம் தேதி கூரியர் வாயிலாக கஞ்சா பார்சல் வருவது குறித்தும் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மோதி நகர் பன் சினிமாஸ் அருகே போலீசார் தீவிரமாக கண்காணித்து, தீனா நாத் என்பவரை கைது செய்து, 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். முக்கிய சப்ளையரான சந்தன் மற்றும் அவரது கூட்டாளிகளைப் பிடிக்க தனிப்படையினர் களம் இறங்கியுள்ளனர்.