உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  நந்தினி பெயரில் கலப்பட நெய்: தேடப்பட்ட மைசூரு தம்பதி கைது

 நந்தினி பெயரில் கலப்பட நெய்: தேடப்பட்ட மைசூரு தம்பதி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'நந்தினி' பெயரில் கலப்பட நெய் தயாரித்து விற்ற வழக்கில், தலைமறைவாக இருந்த மைசூரு தம்பதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் வங்கிக் கணக்கில் இருந்த 60 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு, சாம்ராஜ்பேட்டையைச் சேர்ந்தவர் மகேந்திரா. கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பின் வினியோகஸ்தராக இருந்தார். கே.எம்.எப்.,பில் இருந்து, 'நந்தினி' நெய் வாங்கி, கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார். நெய்யை பாதுகாப்பாக வைக்க, சாம்ராஜ்பேட் நஞ்சம்பா அக்ரஹாராவில் கிடங்கும் வைத்திருந்தார். இந்த கிடங்கில் 'நந்தினி' பெயரில் தயாரிக்கப்பட்ட கலப்பட நெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கே.எம்.எப்., ஊழல் தடுப்பு குழுவுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, கடந்த 14ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து, கே.எம்.எப்., ஊழல் தடுப்பு குழுவினர் கிடங்கில் சோதனை நடத்தினர். அப்போது, 8,136 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டது. சுத்தமான நெய்யுடன் தேங்காய் எண்ணெய், டால்டா, பாமாயில் கலந்து கலப்படம் செய்து விற்றது தெரிந்தது. இந்த வழக்கில் மகேந்திரா, அவரது மகன் தீபக், முனிராஜ், அபி அர்ஸ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், மைசூரை சேர்ந்த சிவகுமார் மற்றும் அவருடைய மனைவி ரம்யா, வழக்கின் முக்கிய குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து, தமிழகத்தின் திருப்பூரில் போலி நெய் உற்பத்தி ஆலை அமைத்து, மகேந்திராவிடம் இருந்து சுத்தமான நெய்யை வாங்கி, தங்கள் ஆலையில் கலப்படம் செய்து, 'நந்தினி' லேபிளை ஒட்டி, கர்நாடகாவுக்கு அனுப்பி வந்தது தெரிந்தது. தம்பதியின் வங்கிக் கணக்கில் இருந்த, 60 லட்சம் ரூபாயையும் போலீசார் முடக்கி உள்ளனர். வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி