சிறுமிக்கு கட்டாய திருமணம் 12 ஆண்டுகளுக்கு பின் கைது
ஷாலிமார் பாக்: 13 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபரை போலீசார் 12 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்தனர்.உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, டில்லியின் ஷாலிமார் பாக் பகுதிக்கு வந்திருந்தார். அவரை, இந்த பகுதியைச் சேர்ந்த 26 வயதான அனில், திருமணம் செய்ய விரும்பினார்.சிறுமியை அழைத்துக்கொண்டு, அவரது சொந்த ஊருக்குச் சென்ற அனில், சிறுமியின் தாயிடம் சம்மதம் பெற்று, திருமணம் செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அனிலும் சிறுமியின் தாயும் தலைமறைவாகினர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு அனில், 38, மும்பையில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து பிரதமரின் இலவச வீடு கிடைப்பதாக அனிலை நம்ப வைத்த போலீசார், டில்லிக்கு அவரை வரவழைத்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டார்.