உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குருவாயூர் கோவிலில் தங்கம், வெள்ளி பொருட்கள்... மாயம்!; 40 ஆண்டுகளாக கணக்கு பார்க்கவில்லை என குற்றச்சாட்டு

குருவாயூர் கோவிலில் தங்கம், வெள்ளி பொருட்கள்... மாயம்!; 40 ஆண்டுகளாக கணக்கு பார்க்கவில்லை என குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், சபரிமலையில் துவாரபாலகர் சிலையில் இருந்து, 4 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தால் ஏற்பட்ட சர்ச்சை அடங்குவதற்குள், பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலிலும் தங்கம், வெள்ளி, யானை தந்தம், குங்குமப்பூ உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போயிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு, நாடு முழுதும் இருந்து தினமும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அத்துடன் தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி வருகின்றனர். சபரிமலையை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருவது போல, குருவாயூர் கோவிலை குருவாயூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், தங்கம், வெள்ளி, தந்தம் மற்றும் குங்குமப்பூ உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கோவிலின் கருவூலத்தில் இருந்து மாயமாகி இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கு தணிக்கை மூலம் சந்தேகம் எழுந்துள்ளது. பக்தர்கள் காணிக்கை மூலம் கோவிலுக்கு வந்த விலை உயர்ந்த பொருட்களை நேரடியாக மதிப்பிடும் பணி கடந்த 40 ஆண்டுகளாக நடக்கவே இல்லை என, சமீபத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகம் இது குறித்து மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கோவிலுக்கு, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட காணிக்கைகளுக்கு முறைப்படி எந்த ரசீதும் எழுதி தரப்படவில்லை. குருவாயூர் கோவிலுக்கு சொந்தமாக நிறைய யானைகள் இருக்கும் நிலையில், அவற்றின் தந்தங்கள் குறித்து போதிய அளவுக்கு பதிவு செய்யவில்லை. யானை தந்தங்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதா என்பதற்கான சான்றுகளும் போதிய அளவுக்கு இல்லை. யானை தந்தங்கள் வெட்டி எடுத்த வகையில் இவ்வளவு ரூபாய் செலவு என கணக்கு எழுதப்பட்டிருக்கிறதே தவிர, அந்த யானை தந்தங்களின் மதிப்பு எவ்வளவு, அவை எங்கே இருக்கின்றன என்ற தகவல்கள் இல்லை. ஆவணப்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் இந்த இடைவெளி தான் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அந்த யானை தந்தங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதா அல்லது சட்டவிரோதமாக விற்கப்பட்டதா என தெரியவில்லை. வெட்டி எடுக்கப்படும் யானை தந்தங்களை, வனத்துறையிடம் உரிய முறையில் ஒப்படைக்கும் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை குருவாயூர் தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டும். அதே போல், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் வாயிலாக ஆவணங்களில் குறித்து வைக்கப்பட்ட தந்தங்களுக்கும், இருப்பில் உள்ளவற்றுக்குமான கணக்கு சரியாக இருக்கிறதா என்பதும் சரிபார்க்கப்படவில்லை. மறுப்பு தந்தங்கள் மட்டுமல்ல, குங்குமப்பூ போன்ற விலை உயர்ந்த பொருட்களுக்கும் இதே நிலைதான் நீடிக்கிறது. வெளிச்சந்தையில் ஒரு கிலோ குங்குமப்பூ ஒரு லட்சத்து 47,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதை, கிலோ கணக்கில் காணிக்கையாக பக்தர்கள் தினசரி செலுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும், குங்கும பூவுக்கான கணக்கு தெளிவாக இல்லை. குருவாயூருக்கு வரும் பக்தர்கள் பாரம்பரியமாக குன்றிமணியையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அப்படி பக்தர்கள் வாயிலாக வந்த குன்றிமணிகள், 17 மூட்டைகளில் கட்டி கோவிலின் மேற்கு கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த 2019 முதல் அந்த மூட்டைகள் மாயமாகியுள்ளன. தினசரி பூஜைகளுக்காக பயன்படுத்தப்படும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் விபரங்களை ஆராய்ந்ததிலும், அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. பூஜைக்கு பின் ஒப்படைக்கப்பட்ட பல பொருட்களின் எடை கணிசமான அளவுக்கு குறைந்து இருக்கிறது. ஒரு வெள்ளி பானையின் எடை மட்டும், 10 மாதங்களில் 1.19 கிலோ குறைந்துள்ளது. மற்றொரு வெள்ளி விளக்கின் எடையும் சில நுாறு கிராம் அளவுக்கு குறைந்துள்ளது. தங்க கீரிடத்திற்கு பதிலாக வெள்ளி ஆபரணம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதே போல், 2.65 கிலோ வெள்ளி பாத்திரத்திற்கு பதிலாக வெறும் 750 கிராம் எடை கொண்ட வெள்ளி பாத்திரம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த குருவாயூர் தேவசம் போர்டு தலைவர் விஜயன், “கோவிலுக்கு வரும் அனைத்து காணிக்கைகளுக்கும் முறைப்படி கணக்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை,” என தெரிவித்துள்ளார். மாயமான தங்கம் அறிக்கை தாக்கல் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு, தன் முதல் அறிக்கையை, சீலிட்ட உறையில் வைத்து கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி.ஜெயகுமார் அடங்கிய அமர்வில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்கம் மாயமான விவகாரத்தில், தற்போதைய நிலை குறித்த விரிவான தகவல்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருப்பதாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ