கோலார்: கோலார் - சிக்கலபல்லாபூர் பால் கூட்டுறவு சங்கமான, 'கோமுல்' நஷ்டத்தில் இயங்குகிறது. 80 கோடி ரூபாய் மதிப்புள்ள பால் பவுடர், வெண்ணை விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளது.கோலார் - சிக்கபல்லாபூர் பால் கூட்டுறவு சங்கம், 'கோமுல்' என அழைக்கப்படுகிறது. கோலார் மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள், பால் உற்பத்தியை நம்பி வாழ்கின்றன. எப்படிப்பட்ட கஷ்ட காலத்திலும், பால் உற்பத்தி விவசாயிகளை கைவிட்டது இல்லை. பால் உற்பத்தியில், கர்நாடகாவிலேயே கோலார் மாவட்டம், இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கம், எட்டு மாதங்களாக நஷ்டத்தில் இயங்குகிறது. கோலார் - சிக்கபல்லாபூர் பால் உற்பத்தி கூட்டுறவில், 1,200 க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். கூட்டுறவு சங்கத்தில் தினமும் 11 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. ஆனால், அவ்வளவும் விற்பனை ஆவதில்லை. மிச்சமாகும் 1.50 லட்சம் லிட்டர் பாலை, பவுடராக்கி சேகரிக்கின்றனர். தற்போது பால் பவுடருக்கு டிமான்ட் இல்லை. 2,100 பால் பவுடர், 800 டன் வெண்ணை விற்பனை ஆகாமல், கிட்டங்கியில் உள்ளன. இதன் மதிப்பு 80 கோடி ரூபாயாகும். இங்கு 1 கிலோ பால் பவுடர் தயாரிக்க, 240 ரூபாய் செலவாகிறது. இதை விட குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கோமுல் மட்டுமல்ல, மாநிலத்தின் மற்ற பால் கூட்டுறவுகளும் இதே சூழ்நிலையில் உள்ளன. பால் கூட்டுறவுகளை நஷ்டத்தில் இருந்து மீட்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர். மாநில அரசு, இரண்டு முறை பால் கொள்முதல் விலையை உயர்த்தியது. ஐந்து மாதங்களாக பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவில்லை. கோலார் மாவட்டத்துக்கு மட்டுமே, 44 கோடி ரூபாய் ஊக்கத்தொகை பாக்கி வைத்துள்ளது. பால் கூட்டுறவுகளின் நஷ்டத்துக்கு, இதுவும் ஒரு காரணமாகும்.