உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பக்தி மணம் கமழும் கோவர்த்தன மலை

பக்தி மணம் கமழும் கோவர்த்தன மலை

கர்நாடகாவில் உள்ள மலைகள், புராணங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. இவை ராமாயணம், மஹாபாரதத்தில் வருவது பெருமைக்குரியது. காவியங்களுடன் தொடர்புள்ளது என்பற்கு மலைகளில் உள்ள கோவில்கள், சிவலிங்கங்கள், பாறைகள் மீதுள்ள அடையாளங்கள், சாட்சிகளாக உள்ளன.சாம்ராஜ்நகர், குண்டுலுபேட்டில், கோபாலசுவாமி மலை அமைந்துள்ளது. இந்த மலை துவாபர யுகத்தில், ஸ்ரீ கிருஷ்ணர், யாதவ குலத்தின் கோபாலர்கள் மாடு மேய்த்த கோவர்த்தன மலை என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு மலைக்கும், ஒவ்வொரு விதமான புராண ரீதியான தொடர்பிருப்பதை போன்று, கோபால மலைக்கும் தொடர்புள்ளது.

பசுமை மலை

கோபாலசுவாமியை துாரத்தில் இருந்து பார்க்கும்போது, பசுவை போன்று தோற்றம் அளிக்கிறது. புராண காலத்தில் மலை, இயற்கை வளங்களுடன் பசுமையாக இருந்தது. இங்கு கோபாலர்கள் மாடு மேய்த்ததால், கோவர்த்தன மலை, கோபால சுவாமி மலை என, பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.பாமா, ருக்மிணியுடன் குடிகொண்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணரை, சந்தான கிருஷ்ணன் என்றும் அழைக்கின்றனர். இங்குள்ள கிருஷ்ணர் சிலையை, அகஸ்திய மகரிஷி பிரதிஷ்டை செய்தாராம்.

சிறப்புகள்

கோபால சுவாமி மலையை, திரயம்பகாத்ரி, மங்களாத்ரி, ஷங்கராத்ரிகிரி, ஹம்சாத்ரி, கருடாத்ரி, பல்லவாத்ரி, மல்லிகார்ஜுன கிரி உள்ளிட்ட மலைகள் சூழ்ந்துள்ளன.ஹம்ச தீர்த்தம், பத்மதீர்த்தம், ஷங்க தீர்த்தம், சக்கிர தீர்த்தம், கதா தீர்த்தம், சக்ஞா தீர்த்தம், வனமூலிகா தீர்த்தம், தொட்லு தீர்த்தம் ஆகிய தீர்த்த குளங்கள் உள்ளன. குழந்தை இல்லாத தம்பதி, தொட்லு தீர்த்தத்தில் நீராடினால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். இக்காரணத்தால் பக்தர்கள் குவிகின்றனர்.கோபாலசுவாமி மலையில் உள்ள கோவிலுக்கும், பல சிறப்புகள் உள்ளன. கோவில் ஏழு நுாற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். ஹொய்சாளர் மன்னர் சோழ பல்லாளா கட்டினார். அதன் பின் மைசூரின் உடையார் வம்சத்தினர், கோவிலை மேம்படுத்தினர். கோவிலுக்குள் அற்புதமாக செதுக்கப்பட்ட சிற்பங்கள், கொடிக்கம்பங்கள், பலி பீடத்தை காணலாம்.அனைத்து பருவ காலத்திலும், பனி பொழிவதால் இந்த மலைக்கு ஹிமவத் மலை என, அழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் உயரமான மலைகளில், மூன்றாவது இடத்தில் உள்ளது. 1,450 அடி உயரம் கொண்டது.பண்டிப்பூர் வனப்பகுதியில் இம்மலை உள்ளது. குண்டுலுபேட்டின், ஹங்களாவில் இருந்து, கோபாலசுவாமி மலைக்கு குறுகலான பாதை உள்ளது. காடு, மேடு, கரடுமுரடான சாலையில் செல்வது நம் மனதை பரவசப்படுத்தும். கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு, அனைத்து மொழிகளும் தெரியும்.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து 220 கி.மீ.; மைசூரு நகரில் இருந்து 74 கி.மீ., தொலைவில் உள்ளது. குண்டுலுபேட்டில் இருந்து 20 கி.மீ., தான். முக்கியமான நகரங்களில் இருந்து, பஸ், ரயில் வசதி உள்ளது. குண்டுலுபேட்டில் இருந்து, ஊட்டி சாலையில் சென்றால், ஹங்களா என்ற கிராமம் வரும். இங்கிருந்து சிறிது துாரம் சென்றால், கோபாலசுவாமி மலையை அடையலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை