அரசு அலுவலர்களுக்கும் வீட்டில் இருந்தே வேலை காற்று மாசு அதிகரிப்பால் அரசு உத்தரவு
புதுடில்லி: காற்று மாசு அபாய நிலையை நோக்கி செல்வதால், மாவட்டங்களில் உள்ள அரசு ஊழியர்களும் வீட்டில் இருந்தே வேலை செய்ய அரசு உத்தரவிட்டு உள்ளது. டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டில்லியின் சில இடங்களில் மிகவும் மோசமான நிலையிலும், பல இடங்களில் அபாயகரமான நிலையிலும் காற்றின் தரக்குறியீடு பதிவாகிஉள்ளது. அதிகரிக்கும் டில்லியில், 12வது நாளாக நேற்றும், காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையிலேயே நீடித்தது. காற்றின் சராசரி தரக்குறியீடு 353ஆக நேற்று பதிவாகி இருந்தது. ரோஹிணியில் காற்றின் தரக்குறியீடு 401ஆக பதிவாகி அபாய நிலைக்குச் சென்றது. இன்று முதல் 28ம் தேதி வரை மேலும் அதிகரிக்கும் என, காற்று தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு கணித்துள்ளது. வெப்பநிலை குறைந்தபட்சமாக, ஒன்பது டிகிரி, அதிகபட்சமாக 25.1 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. காற்று மாசுபாட்டைக் கட்டுக்குள் கொண்டுவர, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மிகவும் மோசமான நிலையை காற்றின் தரம் எட்டியதால், டில்லியில், 'கிராப்' எனப்படும் மூன்றாம் நிலை கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே தனியார் நிறுவனங்களில் 50 சதவீத ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது, மாவட்ட அளவிலான அரசு அலுவலக ஊழியர்களும் வீட்டில் இருந்தே வேலை செய்ய உத்தரவிடப்படுள்ளது. அத்தியாவசிய அதிகாரி மற்றும் அலுவலர்கள் தவிர, மற்ற அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும் என அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவமனைகள், சுகாதாரத் துறை, தீயணைப்புத் துறை, சிறைத்துறை, போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் மற்றும் மாநகராட்சி ஆகிய துறைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த துறைகளில் எப்போதும் போல அனைத்து ஊழியர்களும் அலுவலகம் வர வேண்டும். நடவடிக்கை அரசின் இந்த உத்தரவு குறித்து, டில்லி மாநகரப் போலீசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதுபோன்ற அரசு உத்தரவுகள் வெளியிடப்படும் போது, மாவட்ட கலெக்டர்கள் எங்களுக்கு முறையாக அறிவுறுத்துவர் . அரசு அலுவலர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் உத்தரவை, மாவட்ட கலெக்டர்களுடன் இணைந்து செயல் படுத்துவோம். உத்தரவை மீறுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986ன் பிரிவு 5ன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசு உத்தரவை மீறுவது, சட்டப் பிரிவு 15 மற்றும் 16ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம். இவ்வாறு அவர் கூறினார்.