அதிகாரப்பூர்வ சின்னம் வெளியிட அரசு திட்டம்
விக்ரம்நகர்:தேசிய தலைநகரின் வரலாறு, பாரம்பரியம், முக்கியத்துவம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ சின்னத்தை வெளியிட மாநில அரசு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மாநில அரசின் வட்டாரங்கள் கூறியதாவது: மாநில அரசு வெளியிட உள்ள அரசின் அதிகாரப்பூர்வ சின்னத்தை வடிவமைக்க பொதுமக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த லோகோவை உருவாக்குவதற்கான யோசனைகளை பொதுமக்களும் தெரிவிக்கலாம். பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பானது, இன்று இரவு 11:45 மணிக்கு நிறைவடைகிறது. MyGov.inஎன்ற மத்திய அரசின் இணையத்துடன் இணைந்து மாநில அரசு இந்த போட்டியை நடத்தியது. பொதுமக்களின் பங்களிப்பை ஆய்வு செய்ய தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த லோகோ, மாநில அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாக ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. 'டில்லியின் பாரம்பரியம், பன்முகத்தன்மையில் ஒற்றுமை மற்றும் எதிர்காலக் கண்ணோட்டம்' என்ற கருப்பொருளில் படைப்பு யோசனைகளை அரசு திரட்டுகிறது. சிறப்பான லோகோவை உருவாக்கியவருக்கு முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாயும், இரண்டாவது, மூன்றாவது பரிசாக முறையே 50 ஆயிரமும், 25 ஆயிரமும் வழங்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 'லோகோ' வடிவமைப்புக்கென பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.