மெட்ரோ பணிகளை முடிக்க அரசு கெடு
பெங்களூரு; சென்ட்ரல் சில்க் போர்டு - விமான நிலையம் இடையே மெட்ரோ பணிகளை வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க, கர்நாடக அரசு, 'கெடு' நிர்ணயத்துள்ளது.பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், செல்லகட்டா - ஒயிட்பீல்டு; மாதவாரா - சில்க் இன்ஸ்டிடியூட் இடையே தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், ஓசூர் சாலையில் உள்ள சென்ட்ரல் சில்க் போர்டு முதல் பல்லாரி சாலையில் உள்ள பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2022ல் துவங்கின. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என்று கூறப்பட்டது.ஆனால், இப்போது வரை பெரும்பாலான இடங்களில் பணிகள் நிறைவு பெறவில்லை. இந்த பாதை அமையும் இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் வெளிவட்ட சாலை வழியாக விமான நிலையங்களுக்கு செல்பவர்கள் கடும் அவதி அடைகின்றனர்.மெட்ரோ பணிகளை வேகமாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரயில்களை இயக்கினால் நன்றாக இருக்கும் என, விமான நிலையங்களுக்கு அடிக்கடி செல்பவர்கள், கர்நாடக அரசுக்கு எக்ஸ் வலைதள பக்கம் வாயிலாக அடிக்கடி கோரிக்கையும் வைத்தனர்.இந்நிலையில், பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளை, கர்நாடக அரசின் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி, மெட்ரோ ரயில் பாதை பணிகள் எப்போது முடியும் என்று கேட்டுள்ளனர்.மேலும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும்படியும், வரும் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் கெடு நிர்ணயித்துள்ளனர். இதனால் வரும் நாட்களில் மெட்ரோ பணிகள் வேகம் எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.