UPDATED : நவ 17, 2025 09:42 PM | ADDED : நவ 17, 2025 09:29 PM
புதுடில்லி: டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை நரகத்தில் இருந்தாலும் அரசு வேட்டையாடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.ஹரியானாவின் பரீதாபாத் நகரில் வடக்கு மண்டல கவுன்சிலின் 32வது கூட்டம் இன்று (நவ.,17) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது.வடக்கு மண்டல கவுன்சில் ஆனது ஹரியானா, ஹிமாசலபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், டில்லி, ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், பயங்கரவாதத்தை அதன் வேர்களிலிருந்து ஒழிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில், குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்கள். சாத்தியமான மிகக் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நீதித்துறையின் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள்.போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்ற வழக்குகளில் விரைவான விசாரணை அவசியமாகும். பெண்கள் மற்றும் சிறார்களை குறிவைத்து நடத்தப்படும் கொடூரமான குற்றங்களை எந்த நாகரிக சமூகமும் பொறுத்துக்கொள்ள முடியாது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு அரசின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. விசாரணைகளை விரைவுபடுத்தவும், சரியான நேரத்தில் நீதி வழங்கவும் விரைவு சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை நரகத்தில் இருந்தாலும் அரசு வேட்டையாடும். அவர்கள் செய்த குற்றத்திற்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம். இவ்வாறு அமித்ஷா பேசினார். மவுன அஞ்சலி
கூட்டத்தின் தொடக்கத்தில், செங்கோட்டை குண்டுவெடிப்பு மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள நவ்காம் போலீஸ் ஸ்டேஷனில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்களின் நினைவாக இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.