ஊழியர்களுக்கு 9 மாத சம்பள பாக்கி உடனே வழங்க கவர்னர் உத்தரவு
புதுடில்லி:டி.எஸ்.எப்.டி.சி., எனப்படும் டில்லி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நிதி மேம்பாட்டு நிறுவன ஊழியர்களின் சம்பள நிலுவையை உடனே வழங்க துணைநிலை கவர்னர், டில்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்காக 1983ம் ஆண்டு டி.எஸ்.எப்.டி.சி., என்ற டில்லி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நிதி மேம்பாட்டு நிறுவனம் துவக்கப்பட்டது. இந்த நிறுவனம் நிதியுதவி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்குகிறது. மேலும், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், கடன் வசதி மற்றும் சுயதொழிலுக்கான உதவிகள் ஆகிய திட்டங்களும் இந்த நிறுவனத்தில் செயல்படுத்தப்படுகிறது.ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிறுவனம் டில்லி அரசால் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், துணைநிலை கவர்னர் சக்சேனா, டில்லி அரசுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:கடந்த 9 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை டி.எஸ்.எப்.டி.சி., ஊழியர்கள் என்னிடம் நேரில் முறையிட்டனர். மேலும், சம்பளம் கிடைக்காததால் குடும்பச் செலவை சமாளிக்க முடியாத ஒரு ஊழியர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினர். இதர ஊழியர்களும் கடன் சுமையால் கடும் மன உளைச்சலில் தவிப்பதாக முறையிட்டனர்.எனவே, டி.எஸ்.எப்.டி.சி., நிறுவன ஊழியர்கள் நிலுவை சம்பளத்தை உடனே வழங்கவும், அந்நிறுவனத்தை மீட்டெடுக்கவும் அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.