பெங்களூரு: கர்நாடக அரசின் வாக்குறுதி திட்டங்களுக்கு, மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட் புகழாராம் சூட்டியுள்ளார். சட்டசபையில் நேற்று உரையாற்றிய அவர், ''நாட்டிலேயே கர்நாடகா ஒரு மாதிரி மாநிலம். இங்கு அமல்படுத்தப்படும் பல திட்டங்கள், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றன,'' என்றும் பாராட்டினார்.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மத்திய பா.ஜ., அரசால் நியமிக்கப்பட்ட தாவர்சந்த் கெலாட், கவர்னராக இருக்கிறார். ஆயினும், மாநில அரசுடன் எந்த மோதலிலும் ஈடுபடாமல், இணக்கமாகவே நடந்து கொள்கிறார்.இந்நிலையில், கர்நாடக அரசின் 2024ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. நிதித் துறையை நிர்வகிக்கும் முதல்வர் சித்தராமையா, வரும் 16ம் தேதி, 2024 - 25ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்கிறார். வரும் 23ம் தேதி கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது.மரபுப்படி, கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. சட்டசபை, மேலவை கூட்டு கூட்டத்தில், கவர்னர் தாவர்சந்த் கெலாட் நிகழ்த்திய உரை:கர்நாடக சட்டசபை தேர்தலில் புதிய கனவுடன், மக்களின் ஆதரவு, நம்பிக்கை பெற்று, என் அரசு பணியாற்றுகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, புதிய கலாசாரத்துக்கு அடித்தளம் போட்டுள்ளது. வாழ்க்கையில் மாற்றம்
மக்களின் அன்பு, நம்பிக்கை, எதிர்பார்ப்புக்கு களங்கம் ஏற்படாமல் நடந்து கொள்கிறது. மக்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தின், ஏழு கோடி மக்கள் வாழ்க்கையில், மாற்றம் என்ற காற்று வீசுகிறது.நாட்டில் பொருளாதார சமத்துவமின்மை அதிகரித்திருக்கும் வேளையில், நம் மாநிலம் பொருளாதாரத்தில் மேம்பட்டு வருகிறது. ஆட்சி அமைத்த நாள் முதலே, 'கர்நாடக மாடலை' பின்பற்றி வருகிறோம். மாநிலத்தை, நாட்டிலேயே சிறப்பானதாக உருவாக்குவது இந்த அரசின் குறிக்கோள்.கொடுத்த வாக்குறுதிப்படி, சக்தி, அன்னபாக்யா, கிரஹ ஜோதி, கிரஹ லட்சுமி, யுவநிதி என்ற பஞ்ச வாக்குறுதி திட்டங்கள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்களால், 1.2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழிருந்து, மத்திய நடுத்தர வர்க்கத்திற்கு முன்னேறியுள்ளன. 8 மாத சாதனை
ஆட்சி அமைந்த எட்டு மாதங்களிலேயே பெரிய அளவில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. சக்தி திட்டத்தால், 3.5 கோடி மகளிரும்; அன்ன பாக்யா திட்டத்தால், 4,595 கோடி ரூபாய் அளவுக்கு பணமும்; கிரஹ ஜோதி திட்டத்தால், 1.60 கோடி நுகர்வோரும்; கிரஹ லட்சுமி திட்டத்தால், 1.17 கோடி மகளிரும் பயன் பெற்றுள்ளனர். யுவநிதி திட்டத்துக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.கடந்த எட்டு மாதங்களில், 77,000 கோடி ரூபாய் முதலீடுகள் வந்துள்ளன. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில், 97 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. வர்த்தக கடைகளின் பெயர் பலகைகள், 60 சதவீதம் கன்னட மொழியில் இருப்பது கட்டாயம் என்பது சட்டம் இயற்றி அமல்படுத்தப்படும். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், மாநிலத்தின் அனைத்து கிராமிய வீடுகளுக்கும், 2024க்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும்.பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சுரங்கப் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம், 2024 ஜூலைக்குள் முடியும். 2026 ஜூனில், விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில் இயங்கும். மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்ட, 110 கிராமங்களுக்கு காவிரி ஐந்தாம் கட்ட திட்டம், வரும் மார்ச்க்குள் நிறைவேற்றப்படும். இரண்டாம் கட்ட நகரங்களில், 188 இந்திரா உணவகங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.'நரேகா' திட்டம் மூலம், 5,775 பள்ளிகளிலும்; 150 பி.யு.சி, கல்லுாரிகளிலும் கழிப்பறைகள் கட்டப்படும். விஜயபுரா விமான நிலையம், 2024க்குள் செயல்பாட்டுக்கு வரும். பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்தின், பையப்பனஹள்ளி - சிக்கபானவாரா இடையேயான 25 கி.மீ., நீளத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன. ஹீலலிகே - ராஜனகுண்டே இடையேயான 46.24 கி.மீ., நீளத்துக்கான டெண்டர் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அமைதி பூங்கா
நாட்டிலேயே கர்நாடகா ஒரு மாதிரி மாநிலம். இங்கு அமல்படுத்தப்படும் பல திட்டங்கள், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றன. அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு, அனைவரது ஒத்துழைப்பும் தேவை.மக்கள் பிரச்னைக்கு தீர்வு கண்டு, கர்நாடகாவை வளம் மிக்க மாநிலமாகவும்; அனைத்து மதத்தினரின் அமைதி பூங்காவாகவும் உருவாக்குவோம்.இவ்வாறு அவர் உரையாற்றினார்.காங்கிரஸ் அரசு, நாட்டுக்கே கர்நாடக மாடல் ஆட்சியை அறிமுகம் செய்துள்ளது. பசவண்ணர் சொன்னது போல் ஆட்சி செய்ய வேண்டும் என்பதால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். நாங்கள் ஆரம்பித்து வைத்த வாக்குறுதி திட்டங்களை போன்று பிரதமரும் ஆரம்பித்துள்ளார்.- சிவகுமார், துணை முதல்வர்...புல் அவுட்...கவர்னர் வாயால் பொய் சொல்ல வைத்துள்ளது காங்கிரஸ் அரசு. மத்திய திட்டங்களை, தங்கள் திட்டங்கள் என்று மானம், மரியாதை இன்றி கூறியுள்ளது. தலித்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு திட்டங்களுக்கு ஒதுக்கி, அரசே பொருளாதார சமத்துவமின்மையை காட்டியுள்ளது. இது, கொள்ளை அடிக்கும் அரசு.- அசோக், எதிர்க்கட்சி தலைவர்...புல் அவுட்...அரசு தயாரித்து, கவர்னர் வாசித்த உரையில் உப்பு, காரம் எதுவுமே இல்லை. எந்த புதிய அறிவிப்புகளும் இல்லை. காங்கிரஸ் அரசின் சில திட்டங்களால், பல குடும்பங்கள் தெருவுக்கு வந்துள்ளன. மக்களுக்கு நிம்மதி இல்லை. வேலை வாய்ப்பு இன்றி கஷ்டப்படுகின்றன.- குமாரசாமி, முன்னாள் முதல்வர், ம.ஜ.த.,***