அரசு அதிகாரிகள் இட மாற்ற விவகாரம்: மாநிலங்களுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
'ஒரு மாவட்டத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, அதே லோக்சபா தொகுதிக்குள் இருக்கும் மற்றொரு மாவட்டத்துக்கு இட மாற்றம் செய்யக் கூடாது' என, அனைத்து மாநில அரசுகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.வழக்கமாக, சட்டசபை அல்லது லோக்சபா தேர்தல் நடப்பதற்கு முன், ஒரே மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வேறொரு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவர். புகார்
வரும் ஏப்., - மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, அனைத்து மாநில அரசுகள் பணியிட மாற்றம் செய்து வருகின்றன.இதில் ஒரு சில மாநில அரசுகள், ஒரே லோக்சபா தொகுதிக்குள் இருக்கும் மற்ற மாவட்டத்துக்கு, அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதாக, தலைமை தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் வந்தன.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:ஒரே லோக்சபா தொகுதிக்குள் இருக்கும் மற்ற மாவட்டத்துக்கு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இரு லோக்சபா தொகுதிகள் வரை உள்ள மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் தவிர, மற்ற மாநிலங்களில், லோக்சபா தொகுதிக்கு வெளியே உள்ள மாவட்டங்களில், அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதை அந்தந்த மாநில அரசு கள் உறுதி செய்ய வேண்டும். உத்தரவு
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணியிட மாற்ற உத்தரவுகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும். இதில் எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்கக் கூடாது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.- நமது சிறப்பு நிருபர் -