உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களுக்கு உதவித்தொகை, விவசாய கடன் ரத்து; மஹா., தேர்தலில் பா.ஜ., சலுகை மழை

பெண்களுக்கு உதவித்தொகை, விவசாய கடன் ரத்து; மஹா., தேர்தலில் பா.ஜ., சலுகை மழை

மும்பை : மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ., நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டுள்ளன. பெண்களுக்கான மாதாந்திர உதவித் தொகை 2,100 ரூபாயாக உயர்த்தப்படும், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி அதிகரிக்கப்படும், 25 லட்சம் வேலை வாய்ப்புகள் என, பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. மஹாயுதி எனப்படும் இந்தக் கூட்டணி சார்பில் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.இந்நிலையில், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மும்பையில் நேற்று வெளியிட்டார். துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மாநிலத் தலைவர் சந்திரசேகர பவான்குலே, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:

தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கே காங்கிரஸ் பயப்படுகிறது. ஹிமாச்சல், தெலுங்கானா, கர்நாடகா என பல மாநிலங்களில், அதிகளவு வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது.ஆனால், ஆட்சிக்கு வந்தபின், அவற்றை நிறைவேற்றவில்லை. இதனால், காங்கிரசின் வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை. அதே நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மஹாயுதி நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பெண்களுக்கான மாதாந்திர உதவித் தொகை, 1,500 ரூபாயில் இருந்து, 2,100 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி உயர்த்தப்படும். உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். முதியோர் உதவித் தொகை, 2,100 ரூபாயாக உயர்த்தப்படும். அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்படுத்தப்படும்.இளைஞர்களுக்கு, 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 10 லட்சம் மாணவர்களுக்கு, 10,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். வரும் 2028ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள், ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்படும். மாநிலத்தை, 84 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக உயர்த்துவோம். ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மையமாக மஹாராஷ்டிரா மாற்றப்படும். கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி கூட்டணி!

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்., பிரிவு, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவு ஆகியவை, மஹா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிடு கின்றன.இந்தக் கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பெண்களுக்கான மாதாந்திர உதவித் தொகை, 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அரசு பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், 500 ரூபாய்க்கு ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும், மாதவிடாய் காலத்தில் இரண்டு நாள் விடுமுறை, கர்ப்பப்பை புற்றுநோய்க்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும்.வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 4,000 ரூபாய், கல்விக்கடன், உதவித்தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும்.சுகாதார காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ